வடக்கில் கடனை மீள செலுத்த மீண்டும் கடன் !! 25,000/- க்கு 40,000/- செலுத்த வேண்டும்!!

Report Print Thayalan Thayalan in வர்த்தகம்
1076Shares

நுண் நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாமல், வவுனியாவில் தாய் ஒருவர் தன் குழந்தையை கிணற்றில் எறிந்து கொலை செய்துவிட்டு , தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஓமந்தை, புதிய வேலர்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நாகநாதன் சுகந்தினிக்கு வயது இருபத்து மூன்று, சுகந்தினிக்கு இரண்டு வயதில் சிந்துஜன் என்ற குழந்தையும் உண்டு. மீள் குடியேற்ற கிராமமான சின்னக்குளம் பகுதியில் நுண்நிதி நிறுவங்களால் கொடுக்கப்பட்ட சிறிய தொகை கடனை சுகந்தினியும் எடுத்ததாக தெரிகிறது.

கடன் தவணையை மீள செலுத்த முடியாததால் சுகந்தினிக்கும் கணவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு உள்ளது , அதானால் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுகந்தினி, அருகில் இருந்த கைவிடப்பட்ட காணி ஒன்றின் கிணற்றில் பாய்ந்து, குழந்தையுடன் சேர்த்து தனது உயிரையும் மாய்த்து கொண்டுள்ளார். சிறிய தொகை கடனால் வந்த வீண் மனஸ்தாபத்திற்காக இளம் தாயினதும் குழந்தையினதும் உயிர் வீணே காவு கொள்ளப்பட்டுள்ளது.

இது போன்ற வீண் உயிர்பலிகள் இதற்கு முதலும் நடந்து இருந்து அதற்கான காரணம் தெரியாமலே போயிருக்கலாம். ஆனால் சுகந்தினியின் மரணத்துக்கு கடன் சுமையே பிரதான காரணமாக இருந்திருக்கிறது. போருக்கு பின்னர் வடபகுதி மக்களின் கடன் சுமை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது.

வடக்கில் சராசரியான குடும்பம் ஒன்றுக்கான கடன் சுமையின் அளவு 52, 000 ரூபாயிலிருந்து 194,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்து உள்ளது. நிதி சார்ந்த அறிவு குறைந்த வடபகுதி சாதாரண மக்கள் வங்கிகளினதும், நுண்நிதி நிறுவனங்களினதும் இலகுவான இலக்காக மாறி உள்ளன.

கடன் பொறியில் வீழ்ந்துள்ள வட மாகாணத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழலாம். இதனை தடுத்து நிறுத்த வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக பெருகியுள்ள நிதி நிறுவங்களின் செயற்பாடு பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.

ஏழை பெண்களே பிரதான குறி.

நுண்நிதி (micro finance) நிறுவனங்கள் வங்கிகளின் சேவை பரப்புக்கு அருகில் இல்லாத, வங்கிச் சேவையை இலகுவில் அடைய முடியாத ஏழை மக்களுக்கு கடன்களையும் ஆலோசனைகளையும் வழங்கி, அவர்களுக்கு இடையில் முயற்சியாண்மையை பெருக்கி, ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்காக கொண்டு ஆரம்பிக்க பட்ட நிறுவனங்கள் ஆகும்.

ஆனால் இலங்கையில் நுண்நிதி நிறுவனங்கள் ஏழை மக்களிடம் இருந்து பில்லியன்களில் இலாபம் உழைக்கின்றன. ஏழை மக்களுக்கு கடன் வழங்கி, அவர்களின் வாழ்க்கையின் அபிவிருத்திக்கு பாத்திரமாக இருக்க வேண்டிய நுண்நிதி நிறுவனங்கள் எப்படி பில்லியன் கணக்கில் இலாபம் காட்டுகின்றன என்பது புதிரானது.

இப்படி அவை இலாபம் உழைப்பதற்கு நிதி சார்ந்த அறிவு குறைந்த வட மாகாணத்து ஏழை மக்களையும் குறிப்பாக பெண்களையும் தெரிவு செய்கின்றன. நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பில் அவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. அதன் காரணமாக கடனை திருப்பி செலுத்துகின்ற போது பெரும் சங்கடங்களையும் இடர்பாடுகளையும் எதிர்நோக்குகின்றார்கள். மற்றைய மாகாணங்களில் இந்த நுண் நிதி நிறுவங்கள் பற்றி மக்கள் ஓரளவு தெரிந்து வைத்து இருப்பதுடன், அவர்களுக்கு இந்த நிதி நிறுவங்களால் இலகுவாக கடன் கொடுக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது.

இது தவிரவும், சிறு எண்ணிக்கையிலான பெண்களே தாங்கள் பெற்ற கடன்களை வியாபார முயற்சிகளில் முதலீடு செய்கின்றார்கள், ஏனையவர்கள் நுகர்வு தேவைகளுக்காகவே தாங்கள் பெற்ற கடன்களை பாவிக்கின்றார்கள்.

குறைந்தளவு வருமானத்தை பெறும் கல்வியறிவற்ற ஏழைப் பெண்களோடு எப்படி பேச வேண்டும் என்று நிதி நிறுவனங்களின் முகவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்கள் பெண்களிடம் இலகுவாக கடன்களை அதிகளவான வட்டி வீதங்களில் வழங்குகின்றார்கள். இந்த நிதி நிறுவணங்கள் நாளாந்த, வாராந்த அடிப்படையில் இந்த ஏழை பெண்களிடம் இருந்து மிகக்கூடுதலான வட்டியை பெற்றக்கொள்கின்றன.

கடன் மீள செலுத்த மீண்டும் கடன்

உதாரணமாக, நுண்நிதி நிறுவங்கள் 25,000 போன்ற சிறிய தொகை ஒன்றை கடனாக வழங்கும், அதற்கு 1000/- தொகையினை வாராந்தம் மீள செலுத்த வேண்டும். இதுபோல பத்து மாதங்களுக்கு செலுத்த வேண்டும். கடன் பெற்ற பெண்கள் வட்டியும் முதலுமாக 40,000/- மீள செலுத்தி இருப்பார். இது மாதம் 6% வட்டி ஆகும் , இன்னொரு வகையில் கூறுவதானால் வருடத்துக்கு 72% வட்டி ஆகும். முதல் கடனுக்கான தவணையை ஒழுங்காக செலுத்தும் பட்சத்தில் மேலதிகமாகவும் கடன் வழங்கப்படுகிறது.

இந்த ஏழை பெண்கள் தாங்கள் பெற்ற கடன்களை வேறு தேவைகளுக்ககாக பயண்படுத்திய பின்னர் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வராந்த அடிப்படையில் கடன்களை அறவிடுவதற்காக வீடுகளுக்கு வரும் போது தங்களது கடன்களை அடைப்பதற்காக தங்களது தங்க நகைகளை ஈடு வைத்தோ, பக்கத்துக்கு வீடுகளில் கைமாறியோ தான் கடன்களை அடைத்து கொள்கின்றார்கள்.

கடந்த காலங்களில் தமிழ் பெண்களிடம் நிறையவே சேமிப்புக்கள் தங்க நகைகளாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறி, தங்க நகை கடன்களுக்கான அடகு வைக்கப்பட்டு எதுவுமில்லாதா நிலைமையே காணப்படுகிறது.

மனிதாபிமானம் அற்ற கடன் வழங்கும் முகவர்கள்.

கடன் வழங்கும் ஊழியர்களும் மனிதாபிமானம் அற்ற முறையிலேயே நடந்து கொள்கிறார்கள். நுண் கடன் பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாது விடில், ஊழியரின் பெறுபேறுகள் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் அவருக்கு முழுமையான சம்பளமும், கொமிசனும் கிடைக்காது. இதனால் அவர்கள் கடுமையாக நடந்து கொள்வதோடு , கடன் பெற்ற பெண்களை மிரட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

யாழ்பாணத்தில் இருக்கின்ற நுண்நிதி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கின்ற போது, நாங்கள் கடன் வழங்குகின்ற போது வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வல்லமை கொண்டுள்ளார்களா என சந்தேகம் உள்ள பொழுதும், இப்பிரதேசத்தில் இயங்குகின்ற ஏனைய போட்டி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாகமாகவும், நாங்கள் மாதாந்தம் அடையவேண்டிய கடன் வழங்கல் இலக்கு பற்றிய அழுத்தம் காரணமாகவும், வறிய , திருப்பி செலுத்த ஆற்றல் இல்லாதவர்களுக்கும் கூட கடன் வழங்க வேண்டி உள்ளதாக குறிப்பிட்டார்.

பத்து வாடிக்கையாளர்களை எடுத்து கொண்டால், ஒருவர் மட்டுமே தாங்கள் வாங்கிய கடனை, வட்டியுடன் திருப்பி செலுத்துவதற்கான வல்லமையை கொண்டிருக்கின்றார்கள் எனவும் ஏனைய வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு அதிகளவாக கஸ்டப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார். தான் அந்த தொழிலில் இருந்து விலகுவதற்கு பிரதான காரணம், தனது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படமுடியவில்லை என்று கூறிய அவர், கடன் கொடுப்பதற்காகவும், நிதி நிறுவனங்களின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவும் மக்களை துன்பத்துக்கு ஆளாக்கின்ற துர்பாக்கியமான நிலமை ஏற்பட்டதாகவும் கூறினார். ஊர் மக்களை தரக்குறைவாக நடத்த நேர்ந்தாலும், மக்கள் தனது நடவடிக்கைகள் மூலம் கஷ்டப்படுகிறார்கள் என்று உணர்ந்ததால் மன அழுத்தத்தில் விலகியதாகவும் கூறினார்.

வட மாகாணத்தில் இத்தனை நிதி நிறுவங்கள் எதற்கு?

வங்கிகளின் அடர்த்தி என்பது, ஒரு லட்சம் (100000) மக்களுக்கு எத்தனை வங்கிக்கிளைகள் இருக்கிறது என்பதாகும். 2009 இல் வடக்கில் ஒரு லட்சம் மக்களுக்கு 9.9 ஆக இருந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவங்களின் எண்ணிக்கை 2014 இல் 118% வளர்ந்து 21.6 ஆக அதிகரித்திருக்கின்றது.

மிக முக்கியமாக குறிப்பிட்டு கூற வேண்டிய விடயம், ஒரு லட்சம் மக்களுக்கு, மேல் மாகாணத்தை விட அதிகளவிலான வங்கிகளும் நிதி நிறுவங்களும் வட மாகணத்தில் இருக்கிறது என்பது. 2015 மத்திய தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வெறும் 3.7% பங்கினை வழங்கும் வட மாகாணத்தில், உள்நாட்டு உற்பத்திக்கு பத்து மடங்குக்கும் அதிகமாக 42% பங்கினை வழங்கும் மேல் மாகாணத்தை விட அதிகமாக வங்கிகளும் நிதி நிறுவங்களும் (ஒரு லட்சம் மக்களுக்கு) இருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. இந்த தரவுகள் வடபகுதியில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டில் தவறு இருப்பதை தெளிவாக காட்டி நிற்கின்றது.

மௌனம் கலைக்குமா மத்திய வங்கி?

யாரும் கவனிக்காத வகையில் , வட மாகாணத்தின் மூலை முடுக்கு எங்கும் நுண்நிதி வியாபித்து, ஏழை மக்கள் நாளாந்தம் கூலி வேலை செய்து உழைக்கும் உழைப்பினை சுரண்டி செல்கின்றன. ஏழை பெண்களின் வாழ்க்கையின் அபிவிருத்திக்கு பாத்திரமாக இருக்க வேண்டிய நுண்நிதி நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் இலாபம் உழைப்பது பலகாலமாகவே நடந்து வருகிறது. பொது மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய மத்திய வங்கி இன்னும் அமைதி காப்பது வருத்தத்துக்கு உரியது.

இந்த நுண் நிதி நிறுவனங்களை நெறிப்படுத்துவது மத்திய வங்கியின் கடமை. இன்னும் சில சுகந்தினிகளின் உயிர் சிறு தொகை கடன்களுக்காய் அநியாயமாய் போவதற்கு முன்னர் மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கில் பெருகும் வங்கிகளும், கடன் சுமையில் விழும் மக்களும்

- Suthaharan Perampalam -

Comments