ஶ்ரீலங்கன் எயார்லைன் விமான சேவை நிறுவனம் முழுமையாக மூடப்படும் அபாயம்!

Report Print Vethu Vethu in வர்த்தகம்

ஶ்ரீலங்கன் எயார்லைன் விமான சேவை நிறுவனம் முழுமையாக மூடவிடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நட்டத்தில் இயங்கும் நிறுவனத்தை மேற்கொண்டு நடத்திச் செல்வது சவால் மிக்க விடயம் என நிறுவனத்தின் தலைவர் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார்.

விசேட கடிதமொன்றின் மூலம் தமது உத்தியோகத்தர்களுக்கு இந்த தகவலை தலைவர் அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அரசாங்கத்திற்கு மேலும் மூன்று மாற்றுத்திட்டங்களே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் வருமானத்தை விட செலவு அதிகம் என்பதால், அதனை அரசாங்கத்தாலும் நிதி வழங்கும் இரண்டு வங்கிகளாலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த இரண்டு அரச வங்கிகளும் அவதான நிலைமையை எதிர்கொண்டுள்ளதால், எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் விமான நிறுவன நட்டத்தை ஈடு செய்ய பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் எஞ்சியுள்ள மூன்று மாற்றுத்திட்டங்கள் தொடர்பில் அஜித் டயஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், இணை பங்காளர் மூலம் விமான நிறுவனத்தை செயற்றிறனுடையதாக மாற்றுவதற்கு அதனை மீள் புதுப்பிக்க வேண்டும்.

அவ்வாறான பங்காளரைப் பெற்றுக்கொள்ள முடியாவிடின், அரச நிதி வகுப்பாளர்களினால் தமது செயற்பாடுகளை இந்த நிறுவனத்தின் மூலமாகவே முகாமைத்துவம் செய்ய முடியுமான வகையில் மீள் புதுப்பிக்க வேண்டும்.

இந்த இரண்டு மாற்றுத் திட்டங்களும் வெற்றியளிக்காத பட்சத்தில், ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மூடி விட வேண்டி ஏற்படும்.

பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு மீள் புதுப்பிக்கும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அவர்கள் தற்போது ஆரம்ப ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு விமான நிறுவனத்தை பிரதான தலைப்பாகப் பயன்படுத்தினாலும் அங்கு இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த மூன்று வருடங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதைய பணிப்பாளர் சபையின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டும் தொழிற்சங்கம், தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு வியாபார முகாமைத்துவம் தொடர்பில் எவ்வித அனுபவமும் இல்லை.

ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளும் தகைமை அவருக்கு இல்லை எனவும் கடந்த மூன்று வருடங்களில் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு அதன் தலைவர் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவன தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.