155 தமிழர்களை காப்பாற்றிய அகஸ்ரஸ் காலமானார்

Report Print Thayalan Thayalan in கனடா
155 தமிழர்களை காப்பாற்றிய அகஸ்ரஸ் காலமானார்

அத்தலாண்டிக் சமுத்திரத்தில் 1986ஆம் ஆண்டு, உயிர்காப்புப் படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த 155 தமிழர்களைக் காப்பாற்றிய மீன்பிடிப் படகொன்றின் தலைவரான அகஸ்ரஸ் டோல்ட்டன் (Augustus Dalton) 87 ஆவது வயதில் காலமானார்.

நியூஃபண்லான்டின் சென் ஜோன்ஸ் (St. John’s) இல் திங்கட்கிழமை உறக்கத்தில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கனேடிய கரையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் சரக்குக் கப்பல் ஒன்றால் உயிர்காப்புப் படகுகள் இரண்டில் இறக்கிவிடப்பட்ட தமிழர்கள், உணவும் நீரும் அற்ற நிலையில் மூன்று நாட்களின் பின்னர் டோல்ட்டனால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கரைக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.

அந்தவேளை, தாம் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலில் கொட்டி, தமது படகில் ஆட்களை ஏற்றியதுடன், தம்மிடம் இருந்த உணவு மற்றும் நீர் என்பவற்றையும் அவர், தமிழ் அகதிகளுக்கு வழங்கியிருந்தார். கனடாவுக்குப் பெரும் எண்ணிக்கையான அகதிகள் வந்த முதல் சம்பவமாக அது விளங்குகிறது.

கனேடியத் தமிழர்களின் வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களில் ஒன்றாக அந்தச் சம்பவம் கருதப்படுகிறது. அந்தச் சம்பவத்தின் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 2016 ஆம் ஆண்டு தமிழர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அவரை கௌரவித்திருந்தார்கள்.

மதிக்கத்தக்க செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் (Meritorious Service Medal) என்ற விருது அவருக்கு வழங்கப்படுமென ஆளுநர் நாயகம் ஜனவரியில் அவருக்குக் கடிதம் மூலம் அறிவித்திருந்தாரெனவும் தெரியவருகிறது.

செவ்வாய்க்கிழமை ஸ்காபறோவில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் ஆகியவற்றை முன்னிட்டு லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்புபசாரத்தில் உரையாற்றிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவும் டோல்ட்டனை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.