ஒன்ராரியோ தேர்தலில் இரு பெண்களில் ஈழத்தமிழர்களின் வாக்கு யாருக்கு?

Report Print Dias Dias in கனடா

கனடா - ஒன்ராரியோ மாநிலத்தின் பிரதான கட்சியான பழமைவாத கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதத்தின் முதற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது.

முன்னாள் தலைவர் பற்றிக் பிரவுன் மீது வைக்கப்பட்ட பாலியல் வன்முறை குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் தனது பதவியை துறந்ததை அடுத்து இந்த புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால் அவர் இத்தேர்தலில் தானும் மீண்டும் களம் இறங்கியிருப்பது இக்கட்சி எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும்.

ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியை லிபரல் கட்சியிடம் இழந்துள்ள பழமைவாத கட்சி இம்முறையாவது ஆட்சிப்பீடத்தில் ஏற வேண்டும் என்பதில் பலரும் முனைப்புடன் உள்ளனர்.

தற்போதைய லிபரல் முதல்வர் கதலீன் வெயின் மக்கள் கருத்துக் கணிப்பில் மிகவும் பின் தங்கியுள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய தலைவர் கட்சி ஒற்றுமையைப் பேணி அனைவரையும் அரவணைத்து கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்பவராக இருக்க வேண்டும் என்பதே பலரின் அவாவாக உள்ளது.

தேர்தவில் ஐவர் போட்டியில் உள்ள நிலையில் இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் கரலைன் மல்ரூனி கிரிஸ்டின் எலியட் மற்றும் டக் போட் ஆகியோரே முன்னிலையில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

வரும் யூன் 7ஆம் நாள் நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநில பாராளுமன்றத்திற்கான தேர்தலில் ஏனைய இரண்டு பிரதான கட்சிகளான லிபரல் மற்றும் என்.டி.பி கட்சிகளின் தலைவர்களாக பெண்களே உள்ள நிலையில் பழமை வாத கட்சியின் புதிய தலைவராக ஒரு பெண்ணே தெரிவு செய்யப்பட வேண்டும் என பல கட்சி அங்கத்தவர்களும் விரும்பத் தலைப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அமைந்தால் பழமை வாத கட்சியின் முதல் பெண் தலைவராக அவர் அமைவார்.

ஐவரில் இரண்டு பெண் வேட்பாளர்கள் உள்ள நிலையில் கரலைன் மல்ரூனி மாநில அரசியல் அரங்கில் புதியர் அனைவரிலும் இளையவர் மாறிவரும் சூழலைப் புரிந்து அதற்கேற்ற ஆட்சியை தருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதேவேளை கிரிஸ்டின் எலியட் 9ஆண்டுகள் மாநில அவையில் இருந்தவர். அனுபவம் கொண்டவர் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தி நகரக்கூடியவர் என்ற பார்வை இருக்கிறது.

இதேவேளை மாநில பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளோரிடையே அதிகளவு ஆதரவை பெண் வேட்பாளர்களான கிரிஸ்டினும் கரலைனுமே கொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பழமை வாத கட்சியின் அங்கத்தவர்களாக பதிவு செய்தோருக்கான வாக்களிப்பு குறித்த அறிவுறுத்தல்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதை பெற்றுக் கொண்டோர் தமக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக அடையாளத்தை இணையத்தில் சென்று பதிவு செய்து தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் ஒன்றை தரவேற்றி அனுப்ப வேண்டும்.

அது ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்திலேயே அவர்கள் மார்ச் 2முதல் 8 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் தனது வாக்கை இணையத்தில் அளிக்கலாம்.

அவ்வாக்கிலேயே தமது முதல் தெரிவையும் இரண்டாவது தெரிவையும் அவர்கள் வாக்காக அளிக்க வேண்டும் முதல் வாக்கிலேயே யாரும் 50 சதவீதத்தை பெறும் வாய்ப்பு இல்லை என்பதால் இரண்டாவது தெரிவு முக்கியமாகிறது.

மாநிலத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் பழமைவாத கட்சி உறுப்பினர்களுக்கு முன் முக்கிய தெரிவு உள்ளது. வரும் யூன் 7ஆம் நாள் தேர்தலில் கதலீன் வேயினை வெற்றிகொள்ளக்கூடிய ஆற்றல் உள்ள அந்தத் தலைவர் யார்?

கட்சி எதிர்கொள்ளும் பிரிவுகள் சவால்களை எதிர்கொண்டு அனைவரையும் இணைத்து ஒற்றுமையாக ஒன்ராரியோ மக்கள் எதிர்பாக்கும் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் யார்?

ஆயிரக்கணக்கான அங்கத்துவதர்களாக உள்ள தமிழ் மக்களுக்கும் முன்னாலும் பொறுப்புள்ள ஒரு தெரிவு இருக்கிறது. உணர்ச்சிக் கோசங்களைக் கடந்து ஒன்ராரியோ வாசிகள் என்ற நிலையில் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்குமான நல்ல தெரிவை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

மறவாது முதல் மற்றும் இரண்டாம் தெரிவுகளை அளிக்கத் தவறாதீர்கள். அதுவே வெற்றி பெறக்கூடிய இரண்டு பெண்களாக அமைந்தால் வெற்றியாளரில் உங்கள் பங்கும் இருக்கும் எனக் கொள்ளலாம்.

மார்ச் 2 முதல் 8ஆம் நாள் வரை நடைபெறவுள்ள வாக்களிப்பில் கட்சியின் உறுப்பினர்கள் புதிய தலைவருக்கான வாக்களிப்பில் கலந்து கொள்வர். அதற்கான முடிவுகள் மார்ச் 10ஆம் நாள் வெளியாகும்.