இலங்கைத் தமிழர்களை கொடூரமாக கொன்ற கனேடியருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு

Report Print Kamel Kamel in கனடா

இலங்கை தமிழர்கள் இரண்டு பேர் உள்ளடங்களாக எட்டு பேரை மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்த புரூஸ் மெக்காத்தர் என்ற நபருக்கு கனடாவின் ஒன்டாரியோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஒன்டாரியோ உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜோன் மெக்கோனினால் இந்த தண்டனை நேற்றைய தினம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஸ்கந்தராஜா நவரட்னம், கிருஸ்ணகுமார் கனகரட்னம் உள்ளிட்ட எட்டு பேரை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து மெக்காத்தர் படுகொலை செய்திருந்தார் என்பது வழக்கு விசாரணைகளில் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்தது.

எட்டு பேரையும் கொடூரமாக படுகொலை செய்ததாக 67 வயதான நல வடிவமைப்பாளரான மெக்காத்தார் நீதிமன்றில் ஒப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகள் வரையில் பரோலில் வெளியே வர முடியாத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மெக்காத்தர் தனது 91ஆம் வயதில் தான் பரோலில் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் மிகவும் திட்டமிட்ட வகையில் சித்திரவதைகளை மேற்கொண்டு கொடூரமான முறையில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டு பேரையும் மெக்காத்தர் படுகொலை செய்துள்ளார்.

இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் காவல்துறையினர் கண்டு பிடித்திருக்காவிட்டால் மேலும் பலரை மெக்காத்தார் கொன்று குவித்திருப்பார் என நீதியரசர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நியாயம் வழங்கவும், இவ்வாறான தவறுகள் சமூகத்தில் மீண்டும் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கிலும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதியரசர் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.