இனப்படுகொலை குறித்து கனடிய நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட விசேட பிரேரணை!

Report Print Murali Murali in கனடா

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனக் வலியுறுத்தி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் சென் (Shaun Chen) குறித்த பிரேரணையை இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

எனினும், குறித்த பிரேரணைக்கு ஒருமனதாக இணக்கம் கிடைக்காதமையால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட முடியாது போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், முக்கியமான இந்தப் பிரேரணைக்கு, என்.டீ.பீ, பசுமைக் கட்சி, புளொக் குபெக்குவா ஆகியவற்றின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அனைத்துச் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பிரேரணையின் முழுமையான வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது.

கனேடிய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் நிலவி வரும் நிலையிலும்,

அண்மைக் காலத்தில் அர்த்தமற்ற வன்முறை, இயற்கை அழிவுகள், போர் என்பவற்றால் இலங்கையில் எண்ணற்ற உயிர்கள் இழக்கப்பட்டுள்ள நிலையிலும்,

உயிர்த்த ஞாயிறு நாளன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் மீதும், கொழும்பில் உள்ள விடுதிகள் மீதும் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைக் கனடா கண்டித்த நிலையிலும்,

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கனடா கண்டிக்கும் நிலையிலும்,

கனடா உலகெங்கும் உள்ள அதன் தோழமை சக்திகளுடனும், பங்காளிகளுடனும் இணைந்து அனைத்து வகைப் பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம், இன வெறுப்புச் செயற்பாடுகள் ஆகியவற்றைக் கண்டிக்கும் நிலையிலும்,

இலங்கையில் 26 வருட கால ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தமையின் பத்தாம் ஆண்டு இந்த மாதம் கடைப்பிடிக்கப்பட்டாலும், சமாதானமும், மீளிணக்கமும் இன்னமும் அடையப்படாத நிலையிலும்,

இலங்கையில் ஆயுதப் போரின் இறுதியில் போர்க் குற்றங்களும், மனித இனத்துக்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டதாக இலங்கை குறித்து மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும்,

உண்மையைக் கண்டறிவது, பொறுப்புக் கூறல் ஆகியன, பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்படுவதற்கும், குற்றம்புரியப்படுவோர் தண்டிக்கப்படாத நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நீடித்திருக்கும் அமைதியும், மீளிணக்கமும் ஏற்படுவதற்கும் இன்றியமையாதவை என்பதாலும்,

இந்தப் பேரவை,

1. இலங்கையில் வன்முறை, பயங்கரவாதம், போர் என்பவற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதன் இரங்கலைத் தெரிவிக்கிறது.

2. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதற்கும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குகிறது.

3. ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1, 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் இலங்கைக்கு உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்து ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது. அத்துடன்,

4. 2009 ஆம் ஆண்டில் இலங்கைப் போரின் இறுதியில் தமிழர்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கிறது.