விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை நிராகரித்த கனடா

Report Print Kamel Kamel in கனடா

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாக புலிகளினால் பிரச்சாரம் செய்யப்பட்ட 400 பேர் கனடாவின் ரொரன்டோவில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

பத்து ஆண்டுகளின் பின்னர் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த நபர்களின் ஆள் அடையாளத்தை வெளிப்படுத்துவதனை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், வவுனியா மேல் நீதிமன்றினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் சுதர்சன் என்பவர் ரொரன்டோவில் வாழ்ந்து வருவதாகவும் அவரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ ரொரன்டோ என்னும் கனேடிய பத்திரிகைக்கு சிமோனாபிள்ளை என்னும் பெண் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த நபர்கள் இலங்கையிலிருந்து கனடாவிற்கு தப்பிச் சென்றமை உறுதியாகியுள்ளது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.