கனேடிய நாடாளுமன்ற தேர்தல்! ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி

Report Print Murali Murali in கனடா

கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

எனினும், கடந்த முறை அந்தக் கட்சிக்கிருந்த பெரும்பான்மை இம்முறை இல்லாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த முறையுடன் ஒப்பிடுகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 20 ஆசனங்களை இழந்துள்ளதுடன், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 26 ஆசனங்களை அதிகமாகப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த முறை ஹரி ஆனந்தசங்கரி இதே தொகுதியில் 60 வீத வாக்குகளையும், கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் 27 வீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் –

  • ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி – 31,339 – 62.3 %
  • பொப்பி சிங் – கொன்சர்வேட்டிவ் கட்சி – 10,088 – 20.1 %
  • கிங்ஸ்லி வோக் – புதிய ஜனநாயக கட்சி – 5,735 – 11.4 %
  • ஜெசிக்கா ஹமில்டன் – கிறீன் கட்சி – 2,324 – 4.6 %
  • டிலானோ சாலி – மக்கள் கட்சி – 466 – 0.9 %
  • மார்க் தேடோரூ – கிறிஸ்தவ பாரம்பரிய கட்சி – 353 – 0.7 %
  • பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 76,408
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 50,305