பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி ஆரம்பமான நீதி கோரிய நெடு நடைபயணம் ஒட்டாவாவின் நகர் பகுதியை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது.
கனேடிய அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரிக்கை முன்வைத்து சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமான கடந்த 30.08.2020 அன்று இந்த நடைபயணம் ஆரமாகியிருந்தது.
இதேவேளை கடந்த 05.09.2020 அன்று மொன்றியால் வாழ் தமிழ் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நெடு நடைபயணம் பத்து நாட்களை தொட்டுள்ளது.
குறித்த இரு நடைப்பயணங்களும் நாளைய தினம் இணைந்து கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி இறுதியான இரு மணி நேர நடையை ஆரம்பித்து ஒட்டாவா பாராளுமன்ற திடலில் மதியத்தின் பின் நிறைவடையும் என தெரியவருகிறது.
அங்கு நீதி கோரும் மகஜரை நடைபவனியின் இறுதியில் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட ஏனைய முன்னணி தமிழ்த் தேசிய அமைப்புக்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழ்க் கொடையாளர்கள், கட்டம் கட்டமாக நடைபயணத்தில் இணைந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள் மற்றும் நெடுவழி எங்கும் ஆதரவு தந்த, பிற இன மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக இந் நிகழ்வை தம் தேசியக் கடமையாக சுமந்து வரும், ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கும், தமிழினத்தின் சார்பில் நீதிக்கான நெடுநடைப் பயணக்குழு நன்றி தெரிவித்துள்ளது.