கனடா தமிழர்களை சிறிலங்கா நாடாளுமன்றில் காட்டிக்கொடுத்த தமிழ் கல்விமான்? கடும் கோபத்தில் உலகத் தமிழர்கள்!

Report Print Gokulan Gokulan in கனடா
2481Shares

வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தது.

இந்த சட்டமூலத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி கலாநிதி சுரேன் ராகவன் சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றியிருந்த உரை தொடர்பாகவே கனடா வாழ் தமிழ் மக்கள் தமது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றார்கள்.

கனடா தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியிருந்த கலாநிதி ராகவன், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள 4800 பாடசாலைகளிலும் மே 18 முதல் 25ம் திகதி வரையிலான ஒரு வார காலத்திற்கு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டல்கள் இடம்பெறும் ஆபத்து உள்ளதென்று எச்சரிக்கையையும் விடுத்திருந்தார்.

மிக முக்கியமாக குறிப்பிட்ட அந்த சட்டமூலம் 104 இனை முன்மொழிந்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒரு முன்னாள் இலங்கைப் பிரஜை என்பதையும், அவர் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதையும் அவர் சிறிலங்கா நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

ராகவனின் குறிப்பிட்ட இந்தச் செயல் ராகவனின் உள்நோக்கம் பற்றி சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகச் சுட்டிக்காண்பிக்கும் கனேடிய தமிழ் மக்கள், சட்டமூலம் பற்றிய எச்சரிக்கையை எழுப்பபுவதே ராகவனின் நோக்கமாக இருந்தால் சட்டமூலத்தை முன்மொழிந்தவரின் பூர்வீகம் பற்றி சிறிலங்கா நாடாளுமன்றில் வெளிப்படுத்தவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றார்கள்.

வல்வெட்டித்துறை என்ற அடையாளத்தைச் சுமத்தி, அதன் மூலம் ஏதாவது அனுகூலத்தை ராகவன் பெற்றுக்கொள்ள முயல்கின்றாரா என்ற கேள்வியையும் சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகின்றார்கள்.

இது அப்பட்டமான ஒரு காட்டிக்கொடுப்பு என்று கனேடிய தமிழ் மக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக்கொண்டு தமிழ் இனத்திற்கு எதிராகச் செயற்படும் பலர் வரிசையில் கலநிதி ராகவன் பெயரும் வரலாற்றில் இடம்பெற்றுவிடக்கூடாது என்றும் கருத்துப் பதிவிட்டுவரும் தமிழ் மக்கள், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சைக் குறிவைத்து காய்நகர்த்தும் ராகவன் போன்ற தமிழ் புத்தஜீவிகள் அந்த காரணத்திற்காக தமிழ் மக்களின் நலன்களை அடகுவைப்பதானது ஏற்கனவே வேதனையில் இருக்கும் தமிழ் மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கும் ஒரு செயல் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

( இந்த விடயம் தொடர்பாக கனடா மக்களின் உணர்வுகள், கருத்துக்கள் விரைவில் வெளியிடப்படும்)