இராணுவத்தினர் திட்டமிட்டு செய்ததே வீரமுனைப் படுகொலை

Report Print Nesan Nesan in சமூகம்
156Shares

வீரமுனை படுகொலையானது திட்டமிட்டமுறையில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தொன்றாகும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை வீரமுனை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தினை நினைவு கூர்ந்து இன்று பகல் 12.30 மணியளவில் வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

அத்துடன், கொலை செய்யப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் கொலையுண்டவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

26 வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்திலே எமது தமிழ் உறவுகள் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டார்கள். அந்த நாளை நினைத்து இன்று இந்த இடத்திலே அவர்களது ஆத்மா சாந்தி பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்று சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர், யுவதிகள் ஏறக்குறைய 232பேர் என பலதரப்பட்ட தரப்பினரையும் மிருகத்தனமான முறையில் கொன்றொழித்தார்கள். அந்த நாளை எம்மால் என்றும் மறக்கமுடியாத ஒரு நாளாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.

இன்றைய நாளில் நாங்கள் சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்ளும் விடயம் என்னவென்றால் கொலை செய்யப்பட்ட, காணாமல் போன எமது மக்களை கண்டு பிடிப்பதற்கான ஆணைக்குழு ஒன்றினை அமைத்து அந்த ஆணைக்குழு மூலமாக சரியானதும், மிக நேர்தியானதுமான விசாரணைகளை மேற்கொண்டு எமது மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

தற்போது கொலை செய்யப்பட்ட, காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று கொழும்பில் அமைக்கப்படவுள்ளதாக அறிகிறோம். அப்படி கொழும்பில் அவ்வாரான ஆணைக்குழுக்கள் அமையப்பெறுமாக இருந்தால் எமது மக்கள் சுதந்திரமாகச்சென்று தங்களது பதிவுகளை மேற்கொள்ள முடியாமல் போகும்.

அதன்காரணமாக அமையப்பெறவுள்ள ஆணைக்குழு காரியாலயங்களை தமிழர்கள் செறிந்து வாழக்கூடிய வடகிழக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும்.

அத்தோடு ஆணைக்குழுக்களில் சர்வதேசத்தில் உள்ளவர்களையும் இணைத்துக்கொண்டு ஆணைக்குழுவின் விசாரணைகள் அமையவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்திலேதான் எமது மக்களுக்கான சரியானதும், நியாயமானதுமான தீர்வுகிடைக்கும்.

அவ்வாறு இல்லாமல் கடந்த அரசாங்கம் தமக்கு தேவையனது போன்று ஆணைக்குழுக்களை அமைத்து சர்வதேசத்தை ஏமாற்றியது போன்று அமைக்காது பாதிக்கப்பட்ட மக்களுக்கான சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் ஆணைக்குழுக்களாக அமையவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்திலேதான் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஞாயமான தீர்வுகள் கிடைக்கும்.

இன்று நினைவு கூறப்படுகின்ற எமது இனத்தின் உறவுகளை கொன்றொழித்தவர்கள் எந்தவிதமான விசாரணைகளும் இன்றி தாங்கள் தங்களது பிரதேசங்களில் சுதந்திரமாக நடமாடித்திரிகின்றார்கள்.

அவர்களுக்கான உரிய தண்டனை கிடைக்கவேண்டும் அதற்கு வெளிநாட்டு சர்வதேச விசாரணைகள் சரியான முறையில் நடைபெறவேண்டும் அதன்பின்னர் அவர்களுக்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Comments