தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கனகாம்பிகை புத்தகோவில் அமைப்பு

Report Print Suman Suman in சமூகம்

தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்படும் புத்தகோவில் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கத்துடனேயே இராணுவத்தின் துணையுடன் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு வீதம் கூட பௌத்தர்கள் இல்லாத தமிழர்ளை மாத்திரம் கொண்ட பகுதியில் இப்படியான பிரமாண்டமான பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாகவும், இதே நடவடிக்கைகள் தொடருமாயின் சில காலத்தில் தமிழர்களது கலாசாரம் அழிக்கப்பட்டு, தமிழர்கள் என்றொரு இனம் இங்கு வாழ்ந்துள்ளதா என்ற நிலைதான் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சாதாரண மக்கள் மதில் ஒன்றை கடுவதற்கு அல்லது வீடொன்றைக் கட்டுவதற்கு அனுமதி இன்றிக்கட்டினால் சட்டத்தின் படி தண்டங்களை அறவிடுகின்ற பிரதேசசபை இவ் நடவடிக்கைக்கு என்ன முடிவு எடுத்திருக்கின்றார்கள் என எழுத்துமூலம் கேட்டுள்ளேன்.

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலை சட்டவிரோதமாக அபகரித்துள்ள இராணுவம், தமிழர்களின் தாயகத்தை சிங்களமயமாக்கும் நோக்கிலேயே இராணுவப் பின்னணியில் பொளத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்படுவதாக அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பினையும் மீறி பௌத்த விகாரையை அமைத்து வருகின்றது என குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், மத்திய செயற்குழு உறுப்பினர் க.ஜெயக்குமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா ஆகியோர் குறித்த விகாரை அமைக்கப்படும் பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்டனர்.

இருந்தபோதிலும், விகாரைப்பகுதியை சூழவும் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் காரணமாக முட்கம்பி வேலிக்கு அப்பால் நின்றே விகாரை அமைக்கப்படுவதை சிறீதரன் உள்ளிட்ட குழுவினரால் பார்வையிட முடிந்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Comments