உள்நாட்டு யுத்தம் இன்னும் முடியவில்லை

Report Print Ajith Ajith in சமூகம்
77Shares

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் உயிர்கள் பலியாவது இன்னும் நிறுத்தப்படவில்லை.

யுத்தத்தில் இழந்த உயிர்களுக்கு சமமாக பெறுமதி மிக்க உயிர்களை வீதி விபத்துக்களில் தவணை முறையில் நாளாந்தம் இழந்து கொண்டிருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளைத் திருத்தும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதன் ஊடாக சாரதிப் பாடசாலைகள், சாரதிப் போதனாசிரியர்களுக்கான ஒழுங்கு விதிகளை மாற்றியமைக்கும் இந்த யோசனை வரவேற்கத்தக்கது.

அதே நேரம் நமது நாட்டில் போக்குவரத்து கலாசாரம் ஒன்றை உருவாக்குவதற்கு இதனைவிட விரிவான வேலைத்திட்டம் ஒன்று அவசியம்.

இதனை மேற்கொள்ள போக்குவரத்து பொலிஸ், கல்வி அமைச்சு, தொழிநுட்ப விஞ்ஞான அமைச்சு இணைந்த பொது வேலைத்திட்டம் ஒன்று அவசியம்.

உலக ஒழுங்குக்குக்கு ஏற்ப நவீன நடைமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் உள்வாங்கியதான போக்குவரத்து கலாசாரம் ஒன்றை நாம் உருவாக்க வேண்டும்.

இப்போது நாட்டில் பின்பற்றும் வழிமுறைகள் போக்குவரத்தின்போது சாரதிகள் விடும் தவறுகளை ஒரு வருமான மூலமாக மாற்றிவிட்டிருக்கிறோம்.

வீதியோரங்களில் மறைந்துநிற்கும் போக்குவரத்து போலீசார் தவறுகள் செய்தபின்னர் சாரதிகளிடம் சட்டரீதியாக

அரசுக்கும் சட்டரீதியற்ற வகையில் கையூட்டல் மூலம் தங்களுக்கும் வருமானம் பெறும் மூலமாகவே போக்குவரத்து நடைமுறைகளைக் கையாளுகின்றனர்.

விபத்துகளை தடுப்பதற்கான ஒரு ஏற்பாடு இல்லை. நாட்டில் நாகரிகமான ஒரு போக்குவரத்து கலாசாரம் இல்லை.

பாடசாலை காலம் முதலே போக்குவரத்து கலாசாரம் பற்றிய அறிவு மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். அதற்கு கல்வி அமைச்சின் ஊடாக பாடவிதானங்கள் தயாரிக்கப்படல் வேண்டும்.

சாரதிப்பயிற்சிக்கென தனியான பாடசாலை முறைமை ஒன்று வேண்டும்.

அதற்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம். வெளிநாடுகளில் அமுலில் உள்ள நவீன நடைமுறைகளை உள்வாங்கி மனித நாகரிகங்களில் ஒன்றான போக்குவரத்து கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்.

வீதி விபத்துகள் எனும் வடிவில் இன,மத, சாதி, பிரதேச பேதங்களைக் கடந்து இந்த நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்.

இன்னும் ஓர் உள்நாட்டு யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும். தவணை முறையில் நாளாந்தம் நாட்டின் பெறுமதியான உயிர்கள் காவு கொள்ளப்படுவது தடுக்கபடல் வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கூறியுள்ளார்.

Comments