கொழும்பில் சாத்தியமாகும் போது பலாலியிலும் சாத்தியமாகும்!

Report Print Rakesh in சமூகம்
664Shares

கொழும்பில் இராணுவ முகாம்களுக்கு அருகில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்றனர். அதேபோன்று யாழ்ப்பாணத்திலும் தமிழ் மக்கள் வாழ முடியும் என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க.

அத்துடன் மயிலிட்டியை மீன்பிடிக்க விடுமாறு கோரும் தற்போதைய தலைமுறையினருக்கு அவர்களின் மூத்த தலைமுறையினர் மேற்கொண்ட மீன்பிடி முறைகள் எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படும் செய்தியாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.

இராணுவத்தினரால் கீரிமலையில் அமைக்கப்பட்டு வரும் வீடுகள், செய்தியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன. இதன் பின்னர் பலாலி படைத் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

இதன்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு கூறினார். போர் முடிவடைந்த பின்னர் வடக்கில் இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகள், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள் என்பன தொடர்பிலும் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இராணுவத் தளபதி பதில் வழங்கினார். "மயிலிட்டித் துறைமுகம் எப்போது விடுவிக்கப்படும்" என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,

"நாங்கள் காணிகளை படிப்படியாக விடுவித்து வருகின்றோம். மயிலிட்டியை உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லை. விரைவில் விடுவிக்கப்படும்.

மக்கள் அங்கே மீளக் குடியமர்ந்த பின்னர் அவர்களது துறைமுகம் கையளிக்கப்படும். மயிலிட்டித்துறை முகத்தில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ள விடுவிக்குமாறு இப்போது கேட்கும் தலைமுறையினருக்கு அங்கு தொழில் செய்யத் தெரியாது.

அவர்களது மூதாதையர்கள் செய்த தொழில் இப்போது இவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனாலும், அங்கே செல்வதற்காக மீன்பிடியைச் சொல்கின்றார்கள்.

இதேவேளை, கொழும்பில் மூர் வீதியில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். அங்கே இராணுவ முகாம் இருக்கின்றது. அதன் அருகில் அவர்கள் வசிக்கின்றனர்.

கொம்பனித் தெருவில் தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அதன் அருகிலும் இராணுவ முகாம் இருக்கின்றது. இதேபோன்று பலாலியிலும், இராணுவ முகாமுக்கு அருகில் தமிழ் மக்கள் வசிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments