11வயது சிறுமியின் உயிரிழப்புக்கு பின்னர் கிடைத்த பலன்!

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப் படுக்கையை அண்டிய காட்டுப் பாதையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானை தாக்கி 11 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தார்.

அத்துடன், உயரிழந்த சிறுமியின் தங்கை காயமடைந்த துயரச் சம்பவமொன்று பதிவாகியிருந்தது. குறித்த சம்பவம் இடம்பெற்ற காட்டுப் பாதை மிகவும் மோசமான நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், குறித்த வீதி பற்றைக்காடுகளால் மூடியிருந்த நிலையில் அவற்றினை முழுமையாக அகற்றி மக்களின் போக்குவரத்து பாவனைக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப் பாதையூடாக வேரம், இலுக்குப் பொத்தாணை, பெருமாவெளி, வெள்ளையன்டசேனை, குடாவட்டை, ஈரளக்குளம், பெரியவட்டவான், குருகன்னாமடு போன்ற ஈரளக்குள கிராமசேவகர் பிரிவுக்குப்பட்ட பல கிராமங்களுக்குச் செல்லும் பாதையாக சந்தனமடு ஆற்றுப் பாதை மக்களின் பாவனையில் உள்ளது.

கடந்த காலங்களில் காட்டு யானைகளின் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பயந்து பயந்து சந்தனமடு ஆற்றுப் படுகையை அண்மித்த குறித்த காட்டு வழியூடாக பணயத்தினை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அவற்றுக்கு முழுமையான தீர்வாக சித்தாண்டி, ஈரளக்குள கிராமசேவகர் பிரிவுக்குப்பட்ட பொதுமக்கள், செங்கலடி பிரதேச செயலகத்தின் கூட்டு முயற்சியின் ஊடாக காட்டு யானைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த சந்தனமடு ஆற்றுப்படுக்கையில் இருந்து வேரத்து திடல் ஊடாகச் செல்லும் பற்றைக்காடுகள் நிரம்பிய சுமார் 50 மீற்றர் துரமுள்ள பகுதி வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

குறித்த வேலைத் திட்டத்தில் செங்கலடி பிரதேச செயலக உத்தியேகர்தர்கள், செங்கலடி பிரதேச சபை செயலாளர், ஈரளக்குள கிராமசேவகர், ஈரளக்குள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பலர் கலந்து கொண்டதுடன் தங்களின் சேவைகளையும் வழங்கியிருந்தனர்.

இதேவேளை, தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம், மாகாண சபை போன்றவற்றில் பதவி வகிக்கும் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வீடு வீடாகவும், காடு காடாகவும் வந்தார்கள்.

வெற்றி பெற்றதும், அரசியல்வாதிகளின் வரவு என்பது குறித்த கிராமங்களுக்கு கேள்விக்குறியாகவே உள்ளதென பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Comments