கல்முனையுடன் கல்முனைக்குடியை இணைத்து தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்க சதி!

Report Print Vethu Vethu in சமூகம்

95 வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கல்முனை நகருடன் கல்முனைக்குடியை இணைத்து தமிழ்மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்க சில அரசியல் தலைமைகள் முயற்சித்து வருவது வேதனைக்குரியதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கல்முனைக்குடியை கல்முனையாக மாற்றுவதென்பது பாரதூரமானது.

இது கல்முனையில் பூர்வீகமாக தமிழ்மக்கள் வாழ்ந்தவர்கள் என்ற அடையாளத்தை அழிப்பதுடன் அவர்களது கலை கலாசார இருப்புகளை மழுங்கடிக்கவும் செய்யும். அது மட்டுமல்ல கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலை முடக்கவும் செய்யும்.

2015 வர்த்தமானியிலும் கல்முனைக்குடி என்றொரு தனிக்கிராமம் உள்ளது. வாக்காளர் பட்டியல் காணிப்பதிவு அடையாள அட்டைப்பதிவு எல்லை வரையறை அனைத்துமுண்டு. அப்படிப்பட்ட கிராமத்தை இல்லாமல் செய்து கல்முனையுடன் இணைக்க சில சுயநல அரசியல்வாதிகள் முயற்சிப்பது அப்பகுதியின் தமிழ்மக்களது இருப்பைக் கேள்விக்றிகுயாக்கும்.

தமிழ்மக்களின் இதயமான கல்முனையில் கலை கலாசாரங்களை முன்னெடுக்க அங்கு கலாசார மண்டபமொன்றை உருவாக்க வேண்டும் என்று கேடடிருக்கின்றேன்.

கல்முனை மத்தி வலய உருவாக்கம்!

கல்முனையில் 45 தமிழ்ப்பாடசாலைகளைக்கொண்டு கல்முனை மத்திய வலயமொன்று உருவாக்கப்படவேண்டும்.அதனூடாக தமிழ்மக்களின் கலை கலாசாரம் பாரம்பரியம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். யுத்தத்தால் இழந்த கல்வியை மீளப்பெற இது வழிகோலும்.எதிர்காலத்தில் தமிழர்களின் கல்வியில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தவும் உதவும்.

தற்போதுள்ள வலய மூலம் தமிழ்ப்பாடசாலைகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். உரிய ஆசிரியர்களை நியமிப்பதிலும் இடமாற்றம் பெறுவதிலும் பாரபட்சம் காட்டப்படுகின்றது.

கல்முனைக்குடி சாய்ந்தமருது பகுதிகளில் தேவைக்கு அதிகமாக அதிபர்கள் ஆசிரியர்களுள்ளனர்.ஆனால் பாதிக்கப்பட்ட நாவிதன்வெளி வீரமுனை வளத்தாப்பிட்டி போன்ற பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. சிலவேளை தரமற்ற ஆசிரியர்கள் குவிக்கப்படுகின்றார்கள். வளங்கள் பகிரப்படுவதிலும் பாரபட்சம் காட்டப்படுகின்றது. கல்வி பாதிக்கப்படுகின்றது. எனவே பிரதமர், கல்வியமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர், கலாசார அமைச்சர் ஆகியோரிணைந்து கல்முனை மத்தி வலயத்தை உருவாக்கி சிறந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றேன். அதற்கு சாதகமான தீர்வு வருமென்று நம்புகின்றேன்.

பொத்துவில் வலய விவகாரம்!

பொத்துவில் வலயம் உருவாக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.ஆனால் அங்குள்ள 08 தமிழ்ப்பாடசாலைகளை இணைக்க முற்படுவது தவறு. அவை தொடர்ந்து திருக்கோவில் வலயத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்.

பொத்துவில் தமிழ் பாடசாலைகளிலுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏன் கல்விச் சமூகமும் அதனை விரும்பவில்லை. அப்படி கட்டாயப்படுத்தி இணைத்தால் அது திருக்கோவில் வலயத்திற்கு பாதிப்பை உண்டுபண்ணும். அத்துடன் அங்கு இன முரண்பாடு இனப்பிரச்சினை உருவாகும்.

எனவே எந்தக் காரணம் கொண்டும் பொத்துவில் வலயத்துள் அங்குள்ள 08 தமிழ் பாடசாலைகளும் உள்ளடக்கப்படக்கூடாது. அது தொடர்ந்து திருக்கோவில் வலயத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். அங்குள்ள தமிழ் மக்களின் கலை கலாசாரம் கல்வி என்பன பாதுகாக்கப்பட வேண்டும்.

தேசிய பாடசாலையாக்கியமைக்கு நன்றிகள்!

எமது தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நான் எடுத்த முயற்சிகளுக்கு பக்க பலமாக நின்று ஒத்துழைப்பு நல்கிய பிரதம மந்திரி, கல்வியமைச்சர், பிரதி கல்வியமைச்சர், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி அனைவருக்கும் நன்றிகளை கூறுகின்றேன்.

எனது முயற்சிக்கு இறுதியில் பிரதமமந்திரியும் உதவியமைக்காக அவருக்கும் விசேட நன்றிகள். தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் எதிர்காலத்தில் சிறந்ததொரு தேசிய பாடசாலையாக மிளிரும் என்பதில் நம்பிக்கை உண்டு.

தமிழர்களின் கலை, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்!

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்மக்களின் கலை கலாசாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது முடக்கப்பட்டன. தமிழ்ப்படைப்பாளிகள் கலைஞர்கள் துப்பாக்கிக்கு பலியானார்கள். பாதிக்கப்பட்டார்கள்.

கடந்த 30வருட யுத்தத்தில் தமிழ்மக்கள் பலதரப்பட்ட இழப்புகளை சந்தித்துவந்துள்ளனர். பாரம்பரியம் சிதறடிக்கப்பட்டன.

எமது கலை கலாசாரங்கள் பாதுகாக்கப்படவேண்டும். விசேடமாக எமது படைப்பாளிகள் கலைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையான வளங்களை வழங்க வேண்டும். வடக்கு கிழக்கில் கலை, கலாசாரங்களை வளர்க்க நல்ல கலா நிலையங்களை அமைத்துத்தர வேண்டும் என்று கேட்டுள்ளேன் என்றார்.

Latest Offers

loading...

Comments