புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் போருக்குப் பின்னர் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை

Report Print Manju in சமூகம்

எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள்.

அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

போராட்ட காலத்தில் அவர்களது உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லையென்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.

வவுனியாவில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் பயனாளிகளுக்கு நல்லினப் பசுக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பிரகாரம் எமது திணைக்களங்களினால் தனிநபர்களின் வாழ்வாதாரத்துக்காகச் செய்யப்படும் உதவிகளை மானிய அடிப்படையிலேயே செய்ய வேண்டியுள்ளது.

இது ஏனைய மாகாணங்களுக்குப் பொருந்தலாம். ஆனால், வடக்கு போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணம்.

போரினால் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் எமது மக்களுக்கு, அவர்கள் ஓரளவுக்கேனும் பாதிப்புகளில் இருந்து மீளும் வரையில் மானிய முறையில் இல்லாமல், பணத்தை அறவிடாமல் உதவிகளைச் செய்வதே நியாயமானது.

ஆனால், அரசாங்கத்தின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அவ்வாறு செய்ய முடியாது.

வடக்கு முதலமைச்சர் நிதியமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னமும் கைகூடவில்லை.

எமது முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை காரணமாக அந்நிதியத்துக்குப் புலம்பெயர்ந்து சென்ற எமது உறவுகள் நிதியை அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறார்கள்.

அது சாத்தியமாகும்போது போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அதிகமான உதவிகளைச் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர்கள் ஜி .ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, இ.இந்திராஜா, செ.மயூரன், அனிகாமிகே ஜெயதிலக ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Latest Offers

loading...

Comments