வடமாகாண அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான வயதெல்லை 40ஆக அதிகரிப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வட மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற அடிப்படையில் மாகாண அரச சேவையில் உள்ளீர்க்கப்படுபவர்களுக்கான வயதெல்லையை 35ல் இருந்து 45ஆக அதிகரிக்க கோரி வடமாகாண அமைச்சரவை விடுத்த கோரிக்கையை ஆளுநர் றெஜினோல்ட் குரே அங்கீகரித்து, வடமாகாண அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான உச்ச வயதெல்லையாக 40 வயதை அறிவித்திருக்கின்றார்.

மாகாண அமைச்சரவை வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்டு பல இழப்புக்களை சந்தித்த மாவட்டம் என்ற வகையில், மாகாண அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான வயதெல்லையை 35ல் இருந்து 45ஆக உயர்த்துமாறு அமைச்சரவை கேட்டிருந்தமைக்கு அமையவே ஆளுநர் அந்த வயதெல்லையை 40ஆக அதிகரித்திருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்திற்கு ஆளுநராக பதவியேற்ற காலம் தொடக்கம் வடமாகாணத்தில் வேலையற்ற பிரச்சினை மற்றும் வாழ்வாதார பிரச்சினை ஆகியன உள்ளமையினை கண்டுகொண்டேன்.

என்னை சந்திக்கவரும் இளைஞர், யுவதிகளும் அவ்வாறான பிரச்சினைகளையே கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தவகையில் வடமாகாண அரசசேவையில் இளைஞர், யுவதிகள் இணைந்து கொள்வதற்கான உச்ச வயதெல்லையை 35ல் இருந்து 40ஆக அதிகரிப்பதற்கு நாம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றோம்.

இது வடமாகாண இளைஞர், யுவதிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதேபோல் தொண்டர் ஆசிரியர்கள், பகுதிநேர சேவையாளர்கள், போன்றவர்களுக்கும் நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கும் நிரந்தர நியமனம் விரைவாக வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து இலங்கையில் யாழ்.மாவட்டம் அதிகளவு மதுபான நுகர்வை கொண்ட மாவட்டமாக உள்ளதாக அண்மையில் ஜனாதிபதி கூறிய கருத்து தொடர்பாக கேட்டபோது,

யாழ்.மாவட்டத்தில் மதுபான பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக அரசாங்க அதிபர் தலமையில் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த குழு எமக்கு அறிக்கை ஒன்றை விரைவாக வழங்கும். அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும், சட்டவிரோத மதுபானசாலைகள் மற்றும் சட்டவிரோத மதுபான பாவ னை ஆகியன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers

loading...

Comments