எதிர்கால விடிவுக்காக தமிழா எழுந்து வா...

Report Print Karan in சமூகம்
121Shares

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் தலைநகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஜப்பானிய மக்கள் உயிரிழந்து உடல் அங்கவீனப்பட்டு இன்றுவரை அந்த அனுபவிப்புக்களை முற்றாகத் துறக்க முடியவில்லை என்ற நிலையில் இருந்தபோதும் அவர்கள் மனம் சோரவில்லை.

இழப்புக்களை ஏற்படுத்தியவர்களுக்கு நாம் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற திடசங்கற்பம் பூண்டனர். அதற்காக அவர்கள் கடுமையாகப் பாடுபட்டனர். அவர்களின் கடின உழைப்பும் நாட்டுப் பற்றும் உலகம் முழுவதும் போற்றுமளவில் தம்மை வளர்த்துக் கொண்டனர்.

இன்று இழப்பிற்கும் துன்பத்திற்கும் ஆளாகியிருக்கக்கூடிய உலக நாடுகள் தமது எழுச்சிக்கான உத்வேக மருந்தாக ஜப்பானை நினைக்குமளவிற்கு நிலைமையை மாற்றியவர்கள் ஜப்பானிய மக்கள்.

இரண்டாம் உலகப்போரின்போது அணுகுண்டு வீசப்பட்ட பின்னர் எங்களுக்கு இனி என்ன வாழ்வு என்று அவர்கள் நினைத்திருந்தால் மேட் இன் ஜப்பான் என்ற ( Made in Japan) என்ற உற்பத்திப் பொருட்களை உலக சந்தையில் நாம் தேட வேண்டியிருந்திருக்காது.

ஆக, இழப்புகளைப் பலமாக மாற்றுபவனே இந்த உலகில் வாழ்ந்ததான சரித்திரங்களே இருந்துள்ளன.

அந்தவகையில் ஈழத்தமிழினமும் தனக்கு ஏற்பட்ட இழப்பை, துன்பத்தை தனது சக்தியாக மாற்ற வேண்டும்.இதற்காக தமிழினம் ஒற்றுமைப்பட்டு ஒரு பெரும் மக்கள் சக்தியாகத் தன்னை மாற்றி உரிமையைப் பெறுதல், தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், அறிவியலை வளர்த்தல், சுய தொழில் முயற்சியை வளர்த்தல் என்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

அதேநேரம் அணுகுண்டு வீச்சுக்கு ஆளான ஜப்பான் இன்று வானுயர்ந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருந்த போதிலும் ஓய்வு உறக்கமற்ற வேலைப்பளுவின் காரணமாக ஜப்பானிய மக்கள் உள நிலையில் நெருக்கடிக்கு ஆளாகின்றனர் என்ற செய்தியும் உள்ளது.

ஆகவே, எங்களின் உரிமை, எங்களின் பொருளாதாரம் என்ற விடயங்களில் நாம் கரிசனை கொள்ளும் அதேவேளை உலகம் முழுவதும் போற்றக் கூடியதான எங்களின் தமிழ்ப்பண்பாடு, தமிழ்க் கலாச்சாரம், ஆன்மீகம் என்பவற்றையும் பாதுகாத்து அதன் வழியில் எம் இளம் சந்ததியை ஆற்றுப்படுத் துவோமாக இருந்தால், நிச்சயம் ஈழத்தமிழினத்தை சர்வதேச சமூகம் என்றோ ஒருநாள் திரும்பிப் பார்க்கும். அந்தப் பார்வைக்குள் ஈழத்தமிழர்களுக்கு தான் செய்த பாதகத்தை உணர்ந்து கொள்ளும்.

இவற்றை நாம் ஏற்படுத்தவேண்டுமாயின் அதற்காகச் செய்கின்ற தியாகம் ஏராளமாக இருக்க வேண்டும். இதற்கு முதலில் எதிலும் எங்கள் தமிழினத்தின் வாழ்வு, அதன் பிறகே பதவி, பட்டம், பணம் என்ற மனநிலை எங்கள் ஒவ்வொருவரிடமும் ஏற்படவேண்டும்.

இலங்கையில் தமிழினம் சிறுபான்மை இனமாக இருப்பதால் மட்டுமே பேரினவாதத்தின் போராட்டத்திற்கு ஆளாகிறது என்பதற்கு அப்பால், எங்களிடம் இருக்கக்கூடிய ஒற்றுமையீனம் எங்கள் இனத்தின் மீதான வன்மங்களுக்குக் காரணம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஆகையால் அவர், இவர் என்ற பேதம் கடந்து தமிழினம் என்ற இனத்தின் பெயரால் நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும். எங்களின் எதிர்காலம் , எங்களின் உரிமை, எங்கள் தொடர்பான கருணை என்பவற்றில் அவர் கவனிப்பார். நாம் பேசாமல் இருக்கலாம் என்ற மனநிலை துறந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில்- பேரணியில் திரண்டெழுந்து எங்கள் வாழ்வை நாமே உயர்த்துவோம்.

Comments