திட்டமிட்டு அழிக்கப்படும் வடக்கு வாழ் தமிழர்கள் - வெற்றிபெறுமா பெரும்பான்மை?

Report Print Mawali Analan in சமூகம்
232Shares

ஒரு காலத்தில் கலாச்சாரங்களுக்கும் பண்பாட்டிற்கும் பெயர் பெற்றுவந்த வடக்கு தற்போது துஷ்பிரயோகங்கள், மோசடிகள், குழுமோதல்கள், போதை உட்பட பல்வேறு வகையான சீர்கேடுகளுக்கும் முதல்நிலை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

உண்மையாகவே வடக்கில் போதை உட்பட பலவகையான சமூக சீர்கேடுகள் இடம் பெற்று கொண்டுதான் இருக்கின்றது. எனினும் இது பூதாகரமாக மாறிவருவதோடு அதிகளவாக பேசவும் படுகின்றது. இதற்கு காரணம் திட்டமிட்டு தமிழர்களை அழிக்கும் செயற்பாடுகளே.

வடக்கு மட்டும் தான் இலங்கையில் போதை, மது மற்றும் சீர்கேடுகளுக்கு பெயர் பெற்றதா? இதற்கு காரணம் என்ன? நாட்டில் ஏனைய பகுதிகளில் இவை நடைபெற வில்லையா?

இதற்கான முக்கிய காரணம் வடக்கு வாழ் தமிழர்களை போரினால் அழித்து ஒடுக்கப்பட்ட பின்னர், கலாச்சார ரீதியாகவும் பண்பாடுகள் ரீதியாகவும் தமிழர்கள் அழிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போதே பெரும்பான்மை இனம் நாட்டில் ஆளுமை செலுத்த முடியும்.

ஒரு சிலரின் அரசியல் இலாபங்கள் மற்றும் பெரும்பான்மை இனத்தவரின் ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆளுமையை நிலை நாட்டுவதற்காக திட்டமிட்டு வடக்கு மக்களை அழிக்கும் செயற்பாடுகளாக இவை நோக்கப்படுகின்றது.

வடக்கிற்கு மட்டும் பாரிய அளவு போதை பொருட்கள் எங்கிருந்து வருகின்றது? யார் விற்பனை செய்வது? என்று சரியான குற்றவாளிகள் மட்டும் எப்போதும் அடையாளப்படுத்தப்படுவது இல்லை.

இதேவேளை தமிழர்கள் தமது கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினால் அவர்களை அடக்கவும் அடிமைப்படுத்தவும் முடியாது. இதன் காரணமாக அவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை முதலில் அழிக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.

அதற்கான வழிமுறைகளாகவே இந்துக் கோயில்களை அழித்து அவ்விடத்தில் பௌத்த விகாரைகளை எழுப்புவது, தமிழர் பாரம்பரிய இடங்களை ஆக்கிரமிப்பது போன்ற செயற்பாடுகள் நோக்கப்படுகின்றது.

இதனை விடவும் ஒரு படி மேலே சென்று போதை எனும் ஆயுதம் அதி வேகமாக ஓர் மனிதனை சமூகத்தை ஏன் இனத்தையும் அழித்து விடும் சக்தி மிக்கது.

அதன் காரணமாக திட்டமிட்டு வடக்கில் போதை பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றது. இவற்றின் மூலம் வடக்கு அல்ல நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வடக்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. காலப்போக்கில் தமிழினத்தை அழிக்கும் செயற்பாடுகளான இது நிறுத்தப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகள் இருந்த காலக்கட்டத்தில் இந்த போதை கலாச்சாரம் காணப்படவில்லை அதற்கு காரணம் அவர்களின் சட்ட திட்டம் அதே போன்று வெளிநபர்கள் எவரும் வடக்கில் நுழையாமல் இருந்து வந்ததே.

இத்தகைய போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் உண்மையான நபர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அதன் மூலமாகவே வடக்கில் தலை தூக்கும் சமூக சீர்கேடுகளை நிறுத்தி தமிழ் சமூகத்தை காப்பாற்ற முடியும்.

திட்டமிட்டு தமிழினத்தை அழிக்கும் செயற்பாடுகளை தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டியதுடன், உண்மையான குற்றவாளிகள் இனங்கண்டு கொள்ள வேண்டியதும் அவசியம் என கருத்துகள் வெளிவருகின்றன.

Comments