சம்பந்தனும் விக்கியும் கேட்ட கால அவகாசம் நிறைவடைந்து விட்டது! ஆதங்கப்படும் கேப்பாப்புலவு மக்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
78Shares

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு மீள்குடியேற்றம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் கேட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.

எங்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன? என கேப்பாப்புலவு மக்கள் கேள்வி எழுப்பியிருக்கும் நிலையில், முதலமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கிறார் என மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகிறார்.

கேப்பாப்புலவு, புலக்குடியிருப்பு, சூரிபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 2009ம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்த பின்னர் மீளவும் அவர்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியேற்ற அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் 259 குடும்பங்களை சேர்ந்த மக்கள் மாற்று இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுடைய சுமார் 524 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

கடந்த 24.03.2016ம் திகதி கேப்பாப்புலவு மக்கள் தமது மீள்குடியேற்றத்தை கோரி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு கோரிய முதலமைச்சர், கேப்பாப்புலவு மீள்குடியேற்றம் தொடர்பாக 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக கோரியிருந்தார்.

ஆனால் 3 மாதங்களுக்குள் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், மக்கள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள முயற்சித்தனர்.

இதற்கிடை யில் கடந்த ஜூலை மாதம் 16ம் திகதி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தொலைபேசி ஊடாக கேப்பாப்புலவு மக்களுடன் பேசியபோது, 1 மாதகாலத்திற்குள் கேப்பாப்புலவுக்கு வருவதாகவும், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கால அவகாசமும் நிறைவடைந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மக்கள் மேற்படி கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். விடயம் தொடர்பாக மக்கள் மேலும் கூறுகையில்,

முதலமைச்சர் 3 மாதங்கள் அவகாசம் கேட்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவர் ஒரு மாதகால அவகாசம் கேட்டிருந்தார். இருவரும் கேட்ட அவகாசத்திற்குள் என்ன செய்தார்கள்? எங்களுடைய நிலத்தில் ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படவில்லை.

குறைந்தபட்சம் இரு தலைவர்களும் எங்களை ஒரு தடவை கூட நேரில் சந்திக்கவில்லை. இந்நிலையில் நாங்கள் மீண்டும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டுமா?

உண்ணாவிரதம் செய்து சாகும் நிலையில் இருந்தால் தான் பேசுவார்களா? என மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்நிலையில் கேப்பாப்புலவு மீள்குடியேற்றம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் மேற்படி மக்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்டபோது,

கேப்பாப்புலவு மீள்குடியேற்றம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

கடந்த மார்ச் மாதம் கேப்பாப்புலவு மக்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்த போது முதலமைச்சர் தலையிட்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறுத்தியதுடன், மீள்குடியேற்றம் தொடர்பாக 5 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து அறிக்கை ஒன்றை பெற்றிருக்கிறார்.

அந்த அறிக்கையை கடந்த 26.07.2016ம் திகதி ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆகியோருக்கு தன்னுடைய கருத்துக்களையும் இணைத்து அனுப்பியிருக்கின்றார்.

இதன்படி கேப்பாப்புலவு மக்களை மிக சுலபமாக அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற கூடிய சாதகமான பல தீர்வுகளை முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.

முதலமைச்சருடை ய கடிதத்திற்கு பதில் கிடைக்கப் பெற்றதாக அறியவில்லை. எனினும் முதலமைச்சருடன் இந்த விடயம் தொடர்பாக பேசுவேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments