கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மையில் உள்ள லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நிறுவனத்தின் ஊழியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களில் மூவர் கூரையின் மீது ஏறி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
15 வருடங்களுக்கு மேலாக இந்த லேக் ஹவுஸில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு எந்த விதமான சம்பள உயர்வுகளும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த நிலைமை இவ்வாறிருக்க நேற்று முன்தினம் வேலைக்கு வந்த புது ஊழியர்களுக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்கள்.
இதை எதிர்த்தும் தமக்கு தரவேண்டிய சம்பள உயர்வை தரக்கோரியுமே தாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்கள்.
மேலும், அரசாங்கம் லேக் ஹவுஸ் ஊழியர்களுடன் மறைமுகமான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தின் படி ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் இவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக கூறினார்கள்.
மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள்..
லேக் ஹவுஸ் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் போது இவர்களுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், தமது சம்பள உயர்வோடு, நிறுவனத்தின் பணியாளர்கள் அனுராதபுரம், யாழ்ப்பாணம் போன்ற நாட்டின் பல பகுதிகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், இவர்களது இடமாற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில், இடமாற்றம் நிறுத்தப்படும் என்றும், சம்பள உயர்வு வழங்கப்படாது என்றும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஆனால் தமக்கு சம்பள உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இவர்கள் தொடர்ந்தும் தமது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.