பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவரச கடிதம்

Report Print Arivakam in சமூகம்
42Shares

கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்தினால் முற்றுமுழுதாக சேதமடைந்த கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்களின் நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவரச உதவிகோரிய கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

அவர் அக்கடிதத்தில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முறை மிக மோசமானதாவும் நாளாந்த சீவியத்திற்கான அவர்களின் எதிர்பார்ப்பு பரிதாபத்திற்குரியதாவும் மாறியுள்ளது.

எமது மாவட்டத்தில் நிலவுகின்ற அனர்த்த முகாமைத்துவதிற்கான வளக் குறைபாடுகள் மற்றும் தீயணைப்பு படையின் சேவையினை பெறமுடியாது உள்ளமை என்பவற்றால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

5 மணிநேரங்களுக்கு மேலாக பெரும் சுவாலையாக எழுந்த தீயினால் பொதுச்சந்தையில் அமைந்திருந்த புடைவைக்கடைகள், மளிகைக்கடைக, பழக்கடைகள் உட்டபட 124 கடைகளுக்கு மேல் எரிந்து அழிந்துள்ளன.

இங்கே அமைந்திருக்கின்ற ஒவ்வொரு கடைகளும் சராசரி இருபது இலட்சம் ரூபாய்களுக்கு மேற்பட்ட முதலீட்டை கொண்டிருந்தனர்.

இவர்களின் மொத்த இழப்பு - 221 மில்லியன் ரூபாய்களுக்கு மேற்பட்டது என ஆரம்ப கணிப்புகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 22 பழக்கடைகள் 42 இலட்சம் ரூபாய்களையும், புடவைக்கடைகள் 9 கோடி ரூபாய்களையும், மளிகைக்கடைகள் 4 கோடி அறுபது இலட்சம் ரூபாவினையும், தையல் கடைகள் 6 இலட்சம் ரூபாய்களையும், பகுதி ரீதியான அழிவுகளின் மதிப்பீடு 4 கோடி ரூபாய்களையும். கொண்டு உள்ளது என ஆரம்ப மதிப்பீட்டு அறிக்கை விளித்துள்ளது.

ஏற்கனவே யுத்தத்தினால் இழக்கப்பட்ட சொத்துகளிற்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படத நிலையில் வங்கிகளிலும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிலும் பல இலட்சம் ரூபாய்களை கடனாக பெற்றிருக்கிறார்கள்.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலட்சக்கணக்கான ரூபாய்களுக்கு கடன் கொள்வனவிலும் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

திடீரென ஏற்பட்ட தீவிபத்தினால் வர்த்தகர்கள் பெருநட்டம் அடைந்துள்ளதுடன் பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.

அத்துடன் வர்த்தகர்களின் நீண்ட கடைத்தொகுதிகள் எரிந்து தரைமட்டமாகியுள்ளதால் உடனடியாக வர்த்தகத்தை மீள மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் தென்படவில்லை.

ஆகவே மேற்படி விடயம் குறித்து தாங்கள் அதிவிசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உதவுமாறும் தங்களின் விசேட பணிப்பின் பேரில் அதி உச்ச நட்ட ஈட்டினை வழங்கி உதவுமாறும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Comments