தமிழர்களின் நிலத்தை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்குவதில்லையென தீர்மானம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சிங்கள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக சுவீகரிக்கப்பட இருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்குவதில்லை என கரைத்துறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்கிளாய் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் காணியை சுவீகரிக்க தேசிய வீடமைப்பு அதிகார சபை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அந்த நிலங்களில் சிங்கள மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடுமையான எதிர்ப்பினால் சுவீகரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் நேற்று இடம்பெற்ற கரைத்துறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்,

வீடமைப்பு அதிகாரசபை சிங்கள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக எடுத்திருக்கும் 10 ஏக்கர் அளவிலான நிலம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது என்றார்.

அதனை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்கலாமா? அதற்கு என்ன ஒழுங்கு உள்ளது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதியில் சிங்கள மக்கள் தங்கியிருக்கும் நிலம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. இந்நிலையில் இதனையும் எப்படி கொடுக்கலாம்? என அவர் நியாயம் கேட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த10 ஏக்கர் நிலத்தை தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தினை கரைத்துறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைமை ஒருமனதாக எடுத்தது.

Latest Offers

loading...

Comments