யாழ்ப்பாணம் புங்குடுதீவு வித்தியா சிவலோநாதன் என்ற பாடசாலை மாணவி கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மகாலிங்கம் சிவக்குமார் என்பவரை பொலிஸ் காவலில் இருந்து விடுவித்து, கொழும்புக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்படும் அன்றைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய லலித் ஜயசிங்கவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாது குறித்து யாழ் சிவில் அமைப்பு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய மகாலிங்கம் சிவக்குமார் என்பவறை சம்பவம் நடந்த தினத்தில் பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர், லலித் ஜயசிங்க, சந்தேக நபரை பலாலிக்கு அழைத்துச் சென்று விமானம் மூலம் கொழும்பு அனுப்பி வைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்தது.
சந்தேக நபர் வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கில் வெள்ளவத்தை பிரதேசத்தில் மறைந்திருந்த போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாண வாசிகள் யாழ் நகரில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நீதிமன்றத்தின் மீது கல்வீச்சு தாக்கல் நடத்தினர்.
பிரதான சந்தேக நபரான மகாலிங்கம் சிவக்குமார் வெளிநாடு செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக லலித் ஜயசிங்க தனது உத்தியோக அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தினார் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ளன.
எனினும் இது சம்பந்தமாக இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காத காரணத்தினால், லலித் ஜயசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.