கிளிநொச்சியில் பெருந்திரளானவர்களின் கதறல்களுடன் கஜனின் இறுதி ஊர்வலம்

Report Print Suman Suman in சமூகம்

யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வுகள் காலை பத்து மணிக்கு இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இறுதி ஊர்வலம் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு ஊர்வலமாக பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்து கொள்ள இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரையாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்த பல்கலைகழக மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளையும் கழற்றி எறிந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஊடகவியலாளர்களையும் வெளியேறுமாறும் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் இங்கு சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டிப்பாக தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எவரையும் ஏற்பாட்டாளர்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை.

பின்னர் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவார்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றுள்ளது.

Comments