நல்லிணக்கத்தை நோக்கி செல்லும் பயணத்தில் வடக்கில் அண்மையில் நடந்த சம்பவம் துரதிஸ்டவசமானது, இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிவில் அமைப்புகள் தலையிட்டதால், ஏற்படவிருந்த பெரிய குழப்பத்தை தடுத்து நிறுத்த முடிந்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்து தெரிவிக்கையில்,
அண்மைய காலமாக வடக்கில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இதனால், வீதி தடைகளை அமைத்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பிரதிபலனாகவே இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும், ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கும் போது பயிற்சிகளை பெறாத அதிகாரிகளினால் வழங்கப்படும் தகவல்கள் காரணமாக சில சிக்கல்கள் ஏற்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து தானும் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்த அமைச்சர் சாகலவிடம் ஊடகவியலார்கள் ஆவா குழு குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
குறித்த கேள்விக்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க ஒன்றும் கூறாமல் எழுந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் நிறைவில் அனைத்து விடயங்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.