முத்தரிப்புத்துறை மீனவர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு விடுதலை

Report Print Ashik in சமூகம்
91Shares

முசலி பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லும் நிலையில் தொடர்ச்சியாக கடற்படையினரின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், கடலில் இருந்து கரை திரும்பும் வரை அச்சத்தின் மத்தியிலேயே இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழமை போல் இன்று(26) காலை கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முத்தரிப்புத்துறை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சோதனையிட்டதோடு, படகுகளின் ஆவணங்களையும் சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது முத்தரிப்புத்துறை மீனவர்களின் 7 படகுகளையும் குறித்த படகில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர் முத்தரிப்புத்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் விசாரனைகளை மேற்கொண்ட கடற்படையினர் படகுகள் மற்றும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ததோடு, ஒரு மீனவரை தடுத்து வைத்து விசாரனை செய்த பின் விடுதலை செய்துள்ளனர்.

இதனால் முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அச்சப்படுவதாகவும் முத்தரிப்புத்துறை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு முத்தரிப்புத்துறை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் செல்ல முற்பட்ட ஒருவரை மக்கள் பிடித்து தாக்கிய போது தாக்குதலுக்கு உள்ளான நபர் கடற்படைச் சிப்பாயி என தெரிய வந்த நிலையில் கடற்படையினருக்கும், முத்தரிப்புத்துறை கிராம மக்களுக்கும் இடையில் முறுகள் நிலை ஏற்பட்டது.

இதன் போது தாக்குதல்களுக்கு உள்ளான கடற்படை சிப்பாயிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடற்படை சிப்பாயிகளை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 06 பேர் கைது செய்யப்பட்டு நாளை வியாழக்கிழமை(27) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முத்தரிப்புத்துறை கிராம மக்கள் உள்ள நிலையில் கடற்தொழிலுக்குச் செல்லும் குறித்த கிராம மீனவர்கள் மீது கடற்படையினர் தொடர்ந்தும் கெடுடிபிடிகளை மேற்கொண்டு வருகின்றமை முத்தரிப்புத்துறை கிராம மீனவர்களின் குடும்பங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments