விவசாய ஆராய்ச்சிப் பிரிவை மீண்டும் கரடியனாறுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள்

Report Print Rusath in சமூகம்
112Shares

யுத்தத்தைக் காரணம் காட்டி பொலனறுவைக்கு மாற்றப்பட்ட பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவை மீண்டும் கரடியனாறுக்கு கொண்டு வருமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனை மீண்டும் கரடியனாறு விவசாயப் பண்ணைக்கே கொண்டு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இராஜவரோதயம் சம்பந்தனிடம் கிழக்கு மாகாண விவசாயிகள் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு கரடியனாறு விவசாயப் பண்ணையில் இயங்கி வந்த பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவை, யுத்தத்தைக் காரணம் காட்டி படிப்படியாக இங்கிருந்து இடம் மாற்றி பொலனறுவை மாவட்டத்திலுள்ள அரலகங்வில பிரதேசத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

கடந்த யுத்த காலத்திற்கு முன்னர் கரடியனாறு விவசாயப் பண்ணை 5 பிரிவுகளைக் கொண்டு இயங்கி வந்தது. ஆனால், யுத்தத்தின் காரணமாக கரடியனாறு விவசாயப் பண்ணை முற்றாக செயலிழந்தது.

எனினும் தற்போது கரடியனாறு விவசாயப் பண்ணையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான முன்னெடுப்பின் காரணமாக அதில் ஒரு பிரிவான விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தை மீளத்துவங்குவதற்கான முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஏனைய நான்கு பிரிவுகளும் மத்திய அரசுக்குக் கீழே வேறு வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.

பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவு, விதை உற்பத்திப் பண்ணை, விதை அத்தாட்சிப்படுத்தும் பிரிவு மாவட்ட விவசாய சேவை நிலையம் விவசாய சேவைக்கால பயிற்சி நிலையம் என்பனவே யுத்தத்திற்கு முன்னர் மட்டக்களப்பு கரடியனாறு விவசாயப் பண்ணையில் இயங்கி வந்த பிரிவுகளாகும்.

கரடியனாறு பண்ணையில் பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவு இயங்குமாக இருந்தால் அது இப்பிரதேச மண்வளம் மற்றும் கால நிலைக்கேற்ப விவசாய ஆராய்ச்சிகளைச் செய்து விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

முன்னர் ஒரு காலத்தில் கரடியனாறு பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவில் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கப்பட்ட கே.ஏ.1 மற்றும் கே.ஏ.2 ஆகிய மிளகாய் இனங்களில் கே.ஏ.2 என்பது இப்பொழுது நாடு பூராகவும் பயிரிடப்படுகின்ற இலங்கைக் கால நிலைக்கும் மண் வளத்திற்கும் ஏற்ற பயிராக இருந்து வருகின்றது என்று கூறியுள்ளார்.

எனவே, பிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவு மீண்டும் கரடியனாறு பிரதேசத்திற்குக் கொண்டு வரப்படுவது இதுபோன்ற இன்னும் பல சிறப்பான பயிரினங்களை ஆராய்ச்சி செய்து கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று ஆர். கோகுலதாஸன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments