யாழ்.வலிகாமத்தில் கோவா செய்கையில் அதிக ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Report Print Thamilin Tholan in சமூகம்
205Shares

யாழ்.வலிகாமம் பகுதியில் மரக்கறிப் பயிர்ச்செய்கையான பெரும் போக கோவா செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புன்னாலைக்கட்டுவன், ஈவினை, குப்பிளான், ஏழாலை, குரும்பசிட்டி, கட்டுவன், அச்செழு, ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலப் பகுதியில் கோவா செய்கை பயிரிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கோவா செய்கை இரண்டரை மாத காலத்தில் அறுவடை செய்யப்படவுள்ளது.

கோவா செய்கையின் அதிகரித்த விளைச்சல் காரணமாகக் கடந்த வருடம் தம்மால் அதிக இலாபம் பெற முடிந்ததாக வலிகாமம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புன்னாலைக்கட்டுவனில் கோவா செய்கை மேற்கொண்டு வரும் விவசாயி எஸ். கஜமுகன் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் 10 வருட காலமாகத் தொடர்ச்சியாக கோவா செய்கையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வருடம் மொத்தமாகப் பதினெட்டுப் பரப்பில் கோவா பயிரிட்டுள்ளோம்.

கடந்த வருடம் கோவா அமோக விளைச்சலைப் பெற்றுத் தந்தது. ஒரு கிலோ கோவா 120 ரூபா வரை விற்கப்பட்டமையால் நல்ல இலாபத்தையும் பெறக் கூடியதாக இருந்தது.

கடும் மழை ஏற்பட்டு அதிக வெள்ளம் தேங்கி நின்றால் கோவா அழுகி அழிவடையும் நிலை ஏற்படும். அவ்வாறானதொரு நிலை ஏற்படக் கூடாது என்பதே எமது பிரார்த்தனை என்று கூறினார்.

Comments