பயங்கரவாத தடைச்சட்டத்தை விட தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் அபாயகரமானது

Report Print Ajith Ajith in சமூகம்
72Shares

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்தைக்காட்டிலும் மோசமானதாக இருக்கும் என்று மனித உரிமை நடவடிக்கையாளர்களும், சட்டத்தரணிகளும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்படும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.

எனினும் அவர்கள் தற்போது அதிருப்தியடைந்துள்ளனர் என்று மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை பொறுத்தவரை பாதுகாப்பு கெடுபிடிகளை தளர்த்திக்கொள்ள விரும்பவில்லை. இதன்காரணமாக இன்னமும் 160 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை தடுக்க, 1979ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டம், தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியின்போது கடைப்பிடிக்கப்பட்ட சட்டம் மற்றும் ஐரிஸ் போராளிகளுக்கு எதிராக பிரித்தானியர்கள் கடைபிடித்த சட்டம் என்பவற்றை மையமாகக்கொண்டு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் இந்தச் சட்டம், 1982ஆம் ஆண்டு இலங்கையின் நிரந்தர சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

2009ஆம் ஆண்டு அரசாங்கப் படைகள், விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அரசாங்கம் விடுதலைப்புலிகளை போராட்டத்தில் இருந்து வெளியேற்றியுள்ள நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் ஏன்? அவசியமாகிறது என்று ரட்னவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில், புதிய சட்டம், பழைய அச்சங்களை கொண்டுவரும் என்றும் ரட்னவேல் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சட்டத்தரணி, கிஷாலி பின்டோ இது தொடர்பில் கருத்துரைக்கையில்,

பயங்கரவாதத்தடை சட்டம், வடக்கிலும் தெற்கிலும் சிறைக்கூடத்தில் கைதிகளை தடுத்துவைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்த வழியை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.

இதேவேளை புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் வரைபுகள் பெரும்பாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை போன்று அமைந்துள்ளன என்று மனித உரிமைகள் நடவடிக்கையாளர் ருக்கி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனவே புதிய சட்டம், காணாமல் போனமை மற்றும் சித்திரவதைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் சட்டத்தை போன்று அமைந்திருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் கடந்தகாலங்களில் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்

1987 - 1989ஆம் ஆண்டுக்களில் ஜே.வி.பி கிளர்ச்சியின்போது சிங்கள இளைஞர்களை கைது செய்ய இந்த சட்டம் பயன்பட்டது என்று சட்டத்தரணி ரட்னவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதில்கொண்டு வரப்படவுள்ள தீவிரவாத எதிர்ப்புச்சட்ட வரைபு, பாதுகாப்பு கண்காணிப்புக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments