யுத்தமும் சுனாமியும் வாழ்க்கைச் சவால்களாகி விட்டன

Report Print Rusath in சமூகம்
90Shares

கடந்த 30 வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற பயங்கரமான யுத்தமும், சுனாமித் தாக்கமும் இலங்கைச் சமூகத்தாருக்கு வாழ்க்கைச் சவால்களாக ஆகிவிட்டிருக்கின்றன என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் தெரிவித்துள்ளார்.

நேற்று(26) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச புனர்வாழ்வு மையமான மாவடிவேம்பிலுள்ள உளநல புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளாகி புனர்வாழ்வு பெற்று வருபவர்களைப் பார்வையிட்டுள்ளார்.

புனர்வாழ்வு பெற்றுவருவோர் மற்றும் பாடசாலை இடைவிலகலுக்கு உட்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார மற்றும் வாழ்க்கைத் திறன் சார்ந்த தொழிற் பயிற்சிகளைப் பெற்று வருவோரின் நிலைமைகளை குறித்த நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும், சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜ. டி ரமேஷ் ஜெயக்குமார் கனடிய உயர் ஸ்தானிகர் குழுவினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்து பயனாளிகள் மற்றும் நிருவாகிகள் மத்தியில் உரையாற்றிய கனடிய உயர்ஸ்தானிகர்,

மன நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்களையும், உடல் நலம் குன்றியிருப்பவர்களையும் ஒருபோதும் நாம் புறந்தள்ளிவிட முடியாது என்பதால் நாங்கள் இந்த விடயத்திலும் அக்கறை கொண்டு இணைந்து பணியாற்றுகின்றோம்.

அந்த வகையில் இந்த நிலையம் தனது இயலுமைக்கேற்ற வகையில் சிறப்பாக பணியாற்றுகின்றது என்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். சமூக வடுக்களிலிருந்து விடுபடுவதற்கு இந்த நிலையம் பணியாற்றிக் கொண்டிருப்பது சிறப்பம்சமாகும்.

கனடாவில் இலங்கை வாழ் சமூகம் உள்ளது. அவர்கள் இலங்கையை விட்டுப் போனாலும் அவர்கள் விட்டுச் சென்றதை நினைவு கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கனடாவில் வாழ்ந்தாலும் இலங்கையிலுள்ள அவர்களது சமூக உறவுகளுக்கு நன்றி உடையவர்களாக இருந்து ஆதரவளிப்பார்கள்.

அங்கிருந்தவாறு அவர்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதை நான் கிழக்கு மாகாண விஜயத்தின் போது கண்டறிந்து கொண்டேன். அவர்கள் இன்னமும் நிறையச் செய்ய வேண்டி இருக்கின்றது என்கின்ற செய்தியை நான் கனடாவில் வாழும் இலங்கைச் சமூகத்திற்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீளமைப்பு பணிகளில் கனடா வாழ் இலங்கைச் சமூகம் சம்பந்தப்பட வேண்டியிருக்கின்றது.

கனடிய அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களை அதிலும் குறிப்பாக இளம் பெண்களையும் மேலும் இலகுவில் உடனடியாகப் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய சமூகத்தாருக்கும் தொழிற்பயிற்சிகளை வழங்கி வலுப்படுத்துவதில் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

இளஞ் சமூகம் தனதும், தான் சார்ந்த சமூகத்தினதும், இந்த நாட்டினதும் வளங்கள் செழிப்பதற்காக பணியாற்ற முடியும் என்பதால் அவர்களை தொழிற்பயிற்சிகளின் பால் நாம் வலுப்படுத்துகின்றோம்.அதுதான் ஒவ்வொருவருக்கும் வெற்றி என்கின்ற சூழ்நிலையைத் தோற்றுவிக்க உதவும்.

இந்த நாடு கனடாவைப் போல் பல்மொழிக் கலாசாரத்தை கொண்டது என்பதால் மொழியின்பால் பணியாற்றுவதும் மிக முக்கியமாகனதாக இருக்கின்றது. அந்த விடயத்தில் இன்னமும் கருமமாற்ற வேண்டியுள்ளது. நீங்கள் ஒரு அரச நிருவாகத்தில் சேவையைப் பெற்றுக் கொள்வதாயினும் அல்லது சேவை செய்வதாயினும் உங்களுக்கு பரஸ்பரம் சிங்கள மொழியோ அல்லது தமிழ் மொழியோ தெரிந்திருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் பயிற்சி கிடைப்பதென்பது அவர்களது பொருளாதாரத்துக்கு சில வழிகளில் உதவக் கூடும். வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அது ஒரு வழியாகவும் இருக்கும். நான் சிறுமியாக பாடசாலையில் கற்றுக் கொண்டிருக்கும்போதே தையல் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டேன்' என்றுள்ளார்.

குறித்த நிகழ்வில் கனடிய அரசியல் பொருளாதார ஆலோசகர் ஜெனிபெர் ஹார்ற் உம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments