சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ் வைத்தியசாலையின் பாலியல் தொற்று தடுப்பு பிரிவினால் சர்வதேச எய்ட்ஸ் தினமாகிய இன்று (01) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை குறித்த இரத்தப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

'H.I.V. ஐ ஒழிக்க ஒன்றிணைவோம், தடுப்பு முறைகளை அறிவோம், எம்மைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருள்களின் அடிப்படையில், தேசிய பாலியல் H.I.V. கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்றைய தினம் செய்யப்பட்டு வருகின்றன.

யாழில் 1987 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை 80க்கும் மேற்பட்டோர் H.I.V. எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 40 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு முதல் 2016 வரை 26 பேர் இணங்காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இவ்வருடம் யாழில் 7 பேர் எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளனர்.

H.I.V. தொற்றுக்குள்ளானவர்கள் விரைவில் இணங்காணப்பட்டால் உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான மருந்துகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

H.I.V. தொற்று இரத்தத்தில் இருந்து குறைக்கப்பட்டால் நோய்த் தொற்றும் குறைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

2030ஆம் ஆண்டு H.I.V. தொற்று இல்லாமல் செய்வதற்காக பாலியல் தொற்று தடுப்பு பிரிவினர் செயற்பட்டு வருகின்றதாகவும் H.I.V. தொற்று இருக்குமென சந்தேகிப்பவர்கள் இன்றே பரிசோதியுங்கள் நாளை வரை காத்திருக்க வேண்டாம் எனும் கருப்பொருளின் கீழ் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இது சம்மந்தமான இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் மேற்படி பரிசோதனைகள் குறித்து இரகசியம் பேணப்படும் எனவும் கூறப்பட்டது.

எனவே H.I.V. எய்ட்ஸ் நோயில் இருந்து இன்றே எம்மைப் பாதுகாக்க H.I.V. எய்ஸ்ட் நோய்க்கான பரிசோதனைகளை செய்து நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்போம் என யாழ். போதனா வைத்தியசாலை பாலியல் தொற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Comments