வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் வடிகட்டும் குடிநீர் இயந்திரத்தொகுதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கத்தால் நேற்று(02) மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்த்திட்டம் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான 'இமை பவுன்டேசன்' நிதியுதவியினால் பாடசாலை அதிபர் திரு.சுபாஸ்க்கரன் தலைமையில் நடைப்பெற்றதாக கூறப்படுகின்றது.
குறித்த குடிநீர் இயந்திரத் தொகுதி சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் 'சுத்தமான குடிநீரை சிறுவயதிலிருந்தே பருகுவோம்' செயற்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அண்மைக்காலமாக இலங்கையில் சிறுநீரக நோயின் தாக்கத்தினால் பலர் பாதிப்படைந்து வருகின்றனர்.
வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களே சிறுநீரக நோயினால் அதிகமாக பாதிப்படைந்து வருகின்றனர் என கூறப்படுகின்றது.
குறிப்பாக பாடசாலைகளில் இவ்வாறான குடிநீர் வடிகட்டும் இயந்திர தொகுதிகளை பொருத்துவதன் மூலம் வடிகட்டிய சுத்தமான குடிநீரை மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்தே வழங்குவதே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
கடந்த ஆறு மாதங்களில் வவுனியா மாவட்டத்தில் ஏழு பாடசாலைகளுக்ககு இவ்வாறான குடிநீர் இயந்திரத்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வவுனியா வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் சிறீஸ்கந்தராஜா, புதுக்குளம், கனிஸ்ட வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.