கடற்படை சிப்பாய்கள் மீதான தாக்குதல் - விசாரணைகள் ஒத்திவைப்பு

Report Print Ashik in சமூகம்
40Shares

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை பகுதியில் கடற்படை சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று மன்னார் நீதிமன்றில், மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குஉட்பட்ட மீனவ கிராமமான முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி இரவு அப்பகுதியில் உள்ள வீட்டினுள் செல்ல முற்பட்ட நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது, குறித்த நபர் அருகில் உள்ள பற்றையில் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் பிடித்து தாக்கியுள்ளனர்.

இதன் போது குறித்த நபரை காப்பாற்ற முயற்சித்த பிறிதொரு நபரும் மக்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

மக்களின் தாக்குதல்களுக்கு உள்ளான இருவரும் கடற்படை சிப்பாய்கள் என தெரிய வந்துள்ள நிலையில் ஒருவர் தப்பிச் செல்ல மற்றையவரை மக்கள் பிடித்து வைத்தனர்.

பின்னர் குறித்த நபரை மக்கள் சிலாபத்துறை பொலிஸாரிடம் கையளித்தனர்.

இந்த நிலையில் கடற்படைச் சிப்பாய்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 11 பேருக்கு எதிராக சிலாபத்துறை பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த கிராம மக்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக மன்றில் விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது கடற்படை சிப்பாய்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான குறித்த வழக்கு விசாரணையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மாற்றுமாறு கடற்படை சிப்பாய்கள் சார்பாக மன்றில் ஆஜரான எதிர்த்தரப்பு சட்டத்தரணியினால் இன்றைய தினம் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் சந்தேகநபர்கள் சார்பாக மன்னார் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளான எஸ்.பிறிமூஸ் சிறாய்வா, எஸ்.ஜெபநேசன் லோகு ஆகியோரால் குறித்த வழக்கு விசாரணையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மாற்றுவதற்கு மன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Comments