அரச அலுவலர்களை பயிற்றுவிக்கும் செயலமர்வு ஆரம்பம்

Report Print Rusath in சமூகம்
80Shares

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தரநியமங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள அரசஅலுவலர்களைப் பயிற்றுவிக்கும் இரண்டு நாள் செயலமலர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு தன்னாமுனை மியானி பயிற்சி மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த இரு நாள் செயலமர்வில் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வின் போது உதவி மாவட்ட செயலாளர் எஸ். ரங்கநாதன் உரையாற்றுகையில்,

நாட்டில் நல்ல பிரஜைகளாக சிறுவர்களை உருவாக்குவதே நம்முன்னுள்ள கடமை.

பெற்றோரிடம் கேட்டால் தம் பிள்ளைகளை வைத்தியராக, பொறியியலாளராக, கணக்காளராக, சட்டத்தரணியாக உருவாக்க வேண்டும் என்றுதான் கூறுவார்கள்.

ஆனால், இவையெல்லாவற்றையும் விட பிள்ளைகளை சிறந்த நல்லொழுக்கமுள்ள மனிதர்களாக உருவாக்குவதே இன்றுள்ள சமகாலத் தேவையாகும்.

பதவி, அந்தஸ்து அடிப்படையில் மனிதர்களை உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் சேவையை விட ஒரு மனிதாபிமானமுள்ள சிறந்த பிரஜையாக உருவாக்குவதால் கிடைக்கும் மகோன்னத சேவையை அளவிட முடியாது.

நல்ல மனிதனல்லாத ஒரு வைத்தியரோ அல்லது பொறியியலாளரோ அல்லது அதைவிட பெரிய பதவி வகிக்கின்ற ஒருவரால் சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் கிட்டப் போவதில்லை.

நல்லதொரு மனிதனால்தான் நல்ல மாற்றத்தை குடும்பத்திலும், சமூகத்திலும் நாட்டிலும் கொண்டு வர முடியும்.

அதனாலே தான் மற்றைய எல்லா அபிவிருத்திகளையும் விட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தியில் நாம் கூடுதல் கரிசனை காட்ட வேண்டியுள்ளது.

அரசாங்க அலுவலர்களாக ஊதியம் பெறுகின்ற நீங்கள் சிறந்த விழுமியங்களைக் கொண்ட சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு உங்களது கடமை நேரத்தை செலவிட வேண்டும்.

அதனை நீங்கள் செவ்வனே செய்தால் எதிர்கால சமூகத்தில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

இதன் பின்பு உரையாற்றிய சிறுவர் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் அருண அதுகோறள,

அடுத்த ஆண்டிலிருந்து முன்பிள்ளைப் பருவ தர நியமங்கள் நாடு முழுவதும் அமுலாக்கப்படும்.

பெற்றோர், முன்பள்ளிச்சிறார்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடத்தில் ஆய்வை மேற்கொண்டு பயிற்சி வழிகாட்டல் போன்றவற்றை வழங்கிவரும் ஆசிய மட்ட நிறுவனமாக முன்பிள்ளைப் பருவ சிறுவர் செயலகம் செயற்படுகின்றது.

இலங்கையில் மாகாண மட்டத்தில் முன்பிள்ளைப் பருவ தரநியமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்து இப்பொழுது அதனை கிழக்கு மாகாணத்துக்கு விஸ்தரித்திருக்கின்றோம்.

எந்தவொரு சேவையை எடுத்துக் கொண்டாலும் அதன் தரம் முக்கியமானது.

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி விடயமாக அலுவலர்களும் நிபுணத்துவ தரத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதே சிறுவர் செயலகத்தின் நோக்கமாகும்.

எமது நாட்டில் இதுவரை காலமும் முன்பிள்ளைப் பருவதர நியமங்கள் எவையும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், சிறுவர் செயலகம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாகவே முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பாக ஆய்வு செய்து அதன் பெறுபேற்றின் அடிப்படையில் தரநியமங்களைத் தயாரித்திருக்கின்றது.

நாடளாவிய ரீதியில் பெற்றோர், சிறார்கள், ஆசிரியர்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வைச் செய்திருக்கின்றோம். இது எதிர்கால அபிவிருத்தித் திட்டத்திற்குப் பேருதவியாக அமையும்.

எதிர்வரும் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் முன்பிள்ளைப் பருவ தர நியமங்கள் அமுலாக்கம் நாட்டில் இடம்பெறும்.

சிறார் சம்பந்தமான எதிர்கால வேலைத் திட்டத்திற்கு தரநியமங்கள் அமுலாக்கம் என்பது இன்றியமையாததாக இருக்கும்.

அதனால் அலுவலர்கள் தங்களது நிபுணத்துவதரத்தையும் அறிவையும் ஆற்றலையும் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் மூலமாகவே சிறந்த முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Comments