ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா: சிவாஜிலிங்கம் புகழாரம்

Report Print Thamilin Tholan in சமூகம்

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் போன்றவற்றிற்குச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.

அது மாத்திரமல்லாமல் ஐ . நா தலைமையில் பொதுவாக்கெடுப்பின் மூலம் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தலைவிதியைத் தாமே நிர்ணயிக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி,

இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும், ஐக்கியநாடுகள் சபைக்கும், சர்வதேச சமூகத்திற்கும் ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்ததை என்றென்றும் நாங்கள் எங்கள் நெஞ்சிலே இருத்தி வைத்திருப்போம்.

தமிழக முதலமைச்சர் செல்வி-ஜெயலலிதா மறைவையிட்டு ஈழத் தமிழர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்திருக்கின்றார்கள் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

உடல்நலக் குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி-ஜெயலலிதா ஜெயராம் கடந்த திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

இதனை விடுத்து அவர் வழங்கிய இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழக முதலமைச்சர் அம்மையாரின் இழப்புக்கு அனுதாபம் தெரிவித்துச் செவ்வாய்க்கிழமை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டது மாத்திரமன்றி மூன்று நாட்களுக்குத்துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வடக்கு மாகாண சபையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுவது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை நான் விடுத்த போது உடனடியாகவே அவைத் தலைவர் அந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதலளித்திருந்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு வடக்கு மாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

அது மாத்திரமன்றி வடக்கு-கிழக்கு மாகாண மக்கள், வர்த்தக சங்கங்கள், வணிகர்கள், பொது அமைப்புக்கள் என்பன தாமாகவே முன்வந்து பல்வேறு இரங்கல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளனர்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட ஆரம்பித்து அதன் பின்னர் இந்தியாவின் மேலவையான ராஜ்ய சபையின் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.

அமரர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டு கட்சி இரண்டாகப் பிளவுபட்ட வேளை கட்சியின் தலைவராகி அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

அதன்பின்னர் 1990 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஈழத்தமிழர் விடயத்தில் சில சர்ச்சையான முடிவுகளை எடுத்திருந்தாலும் கூட இலங்கையில் இடம்பெற்ற போரை நிறுத்துவதற்காகத் தொடர்ச்சியாக உரத்துக் குரல் கொடுத்து வந்துள்ளார் .

2009 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு பெரிய கூட்டணியை நிறுவி ஈழத்தமிழர்களுக்காக மிகவும் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தார்.

கடந்த-2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம்-09 ஆம் திகதி பல்லாயிரம் மக்களுடன் சேர்ந்து புரட்சித் தலைவி செல்வி-ஜெயலலிதா ஜெயராம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஈழத் தமிழர்களுக்காகச் சென்னையில் ஏற்பாடு செய்து நடாத்தினார்.

அன்றைய தினம் காலை-08 மணியிலிருந்து பிற்பகல்-05 மணி வரை ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் அம்மையார் இருந்த காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

அந்த வேளையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நானும் அம்மையார் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குச் சென்றிருந்தேன்.

என்னை விசேடமாக அழைத்த ஜெயலலிதா அம்மையாரின் அருகில் நான் சென்ற போது நான் எடுத்துச் சென்ற பொன்னாடையை அவர் எழுந்து நின்று வாங்கியமை தனிப்பட்ட சிவாஜிலிங்கத்துக்கு அவர் வழங்கிய கெளரவமல்ல. ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களுக்காகவும் அவரால் வழங்கப்பட்ட கெளரவமாகவே நான் பார்க்கிறேன்.

அது மாத்திரமன்றி திருமதி-ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளராகப் பதவி வகித்த காலப் பகுதியில் சென்னையிலுள்ள தன்னுடைய வாசஸ்தலத்திற்கே அழைத்துப் பேசி இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களுக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்திக் கூறி வந்தார்.

அத்துடன் ஈழத் தமிழர்களின் நலனுக்காகப் பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வந்த சூழலிலேயே அவர் தனது உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்ற துர்ப்பாக்கிய செய்தி எங்கள் காதுகளுக்கு எட்டியது.

அம்மையார் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பன்னீர்ச் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் எமக்குத் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.

இதேபோன்று தமிழகத்திலுள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒட்டு மொத்தத் தமிழகமும் எமது உரிமை நோக்கிய பயணத்திற்குத் தோளோடு தோள் நிற்க வேண்டும்.

எமது தாயக மக்கள் உட்பட உலகத் தமிழினமும் ஒன்றுபட்டு நிற்குமானால் எங்களை நாங்களே ஆளக் கூடியதொரு தீர்வினை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.

Comments