இரணைமடுவில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இரணைமடு குளத்திலிருந்து அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணை கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று(08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை குறித்த வழக்கு, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் ,சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட போதிலும் சடலத்தில் 16 உள்காயங்களும், 6 வெளிக்காயங்களும் இருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இதுவொரு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.