சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ளவதில் மக்கள் சிரமம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
27Shares

அக்கரப்பத்தனை - கிளாஸ்கோ தோட்ட நெதஸ்டல் பிரிவில் வாழும் 150 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சுத்தமான குடி நீர் இல்லாமல் பெரும் சிரமங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் அதிகமான இடங்களில் ஊற்று நீர் இருக்கின்ற போதிலும் இம்மக்கள் சுத்தமான நீரை பருக முடியாமல் சேற்று நீரை பருகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதேவேளை நீரை பெற்றுகொள்வதற்காக வைத்துள்ள நீர் தாங்கிகள் மற்றும் நீரோடைகளை தோட்ட நிர்வாகம் சுத்தம் செய்து கொடுப்பதில்லை எனவும் பொருத்தப்பட்டுள்ள நீர் குழாய்களும் மிகவும் மோசமாக உடைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அக்கறை காட்டாமல் அசமந்தபோக்கில் இருப்பதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குடி நீர் குழாய்களில் வடியும் நீருக்காக பல மணிநேரம் காத்திருக்கும் இவர்கள் தங்களின் தேவைகளை உரிய நேரத்தில் செய்துகொள்ள முடியாமல் அதிகாலை நேரத்தில் தொழிலுக்கு தாமதமாக செல்லும் போது தோட்ட உத்தியோகஸ்தர்களால் தொழில் செய்ய மறுப்பதாகவும் இதனால் தொழில் இல்லாமல் வருமானத்தினை இழப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் தொழிலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் மழைக்காலங்களில் நீர் குழாய்களில் இருந்து வரும் நீர் மணல் கலந்த சேற்று நீர் எனவும் இதனை வடிகட்டி பருகிவருவதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான அசுத்தமான நீரை பருகுவதால் சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் பல்வேறுப்பட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் சிறுநீரக நோய் வரக்கூடும் என அச்சத்தில் இருக்கின்றனர்.

இவர்கள் மலையக பகுதியில் நீர் வலம் அதிகமாக இருக்கின்ற போதிலும் தாம் சேற்று நீரை பருகுவதுடன் ஒரு குடம் நீர்க்காக பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மலையக அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச அதிகாரிகள் உடனடியாக தங்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வரவேண்டும் என இம்மக்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments