ஆதிவாசி பழங்குடியினரை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்

Report Print Navoj in சமூகம்
80Shares

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கிராமம் மற்றும் மிகவும் பின்தங்கிய கிராமமான குஞ்சம் குளம் கிராமத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வே.மகேஸ்வரன் சென்றுள்ளார்.

அங்கு வாழ்கின்ற ஆதிவாசி பழங்குடியினரை சந்தித்து அவர்களது குறைபாடுகளை பற்றி கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல் தொழில் மீன் பிடி நடவடிக்கையின் போது கதிரவெளி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக வெளியூர் மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய மீன் பிடி நடவடிக்கையினால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையின் அவல நிலமை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து குங்சங்குளம் கிராமத்திற்கு சென்றிருந்த அமைப்பாளர் அங்கு வாழும் ஆதிவாசிகள் தற்போது எதிர்நோக்கும் சமூர்த்தி வறுமை நிவாரண கொடுப்பனவு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கும் போது கட்டாயப்படுத்தி 500 ரூபா பணம் பெற்றுக் கொண்ட பின்னரே நிவாரணக் கொடுப்பணவு வழங்க மாங்கேணி சமூர்த்தி வங்கி முகாமையாளரால் அனுமதி வழங்கப்படுவதாக அமைப்பாளிடம் முறையிட்டனர்.

இதற்கான பற்றுச் சீட்டுக்களோ எந்த எழுத்து மூலமான ஆவணமோ தங்களுக்கு பெற்றுக் கொள்ளும் பணம் தொடர்பாக வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வங்கியின் வளவிற்கு வேலி அமைப்பதற்கும் குடி தண்ணீர் வசதியை ஏற்படுத்துவதற்கும் தங்களிடமே பணம் அறவிடப்பட்டதாகவும் இது தொடர்பான விளக்கமோ தங்களுக்கு வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத்பொன்சேகாவின் பணிப்புரையின் அடிப்படையில் பின் தள்ளப்பட்ட கிராமங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பாக மேற்குறித்த இடங்களுக்கு அவற்றினை நேரில் சென்று பார்வையிட்டதாகவும் இது தொடர்பாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைப்பாளர் வே.மகேஸ்வரன் மக்களிடம் கூறியுள்ளார்.

Comments