அரசாங்கத்தின் பலத்துடன் ஏதேச்சதிகாரமாகச் செயற்படும் பிக்குகள்

Report Print Thamilin Tholan in சமூகம்
96Shares

கிழக்கு மாகாணத்தில் ஒரு பெளத்த பிக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழர்களுடைய காணிக்குள் அத்துமீறி உள்நுழைந்து விகாரை கட்ட முற்படுகிறார்.

காவற்துறையினரையும், கடமைக்குச் செல்லும் கிராமசேவையாளரையும் தாக்குவதற்கு முற்படுகிறார்.

ஊர் மக்களை அச்சுறுத்துகிறார். இவ்வாறான நிலையில் பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றனர். நீதிமன்றம் தடையுத்தரவைப் பிறப்பிக்கும் போது பிக்குமார்கள் துணிந்து அதனைக் கிழித்தெறிகின்றனர்.

ஆனால், இதே காரியங்களை நாங்கள் செய்தால் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதொரு நிலைமையே உருவாகியிருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்கு ஆணை பெற்றுக் கொடுக்கக் கூட்டமைப்பினர் முயற்சித்து வரும் நிலையில் இவர்களின் எந்தவொரு ஏற்பாடும் பெளத்த பிக்குகள் ஆடுகின்ற ஆட்டத்தைக் கட்டுப்படுத்தப் போவதில்லை.

அரசாங்கத்தினுடைய முழுமையான பலத்துடன் நின்று கொண்டு தான் ஏதேச்சதிகாரமான செயற்பாடுகளை பிக்குகள் செய்கிறார்கள் எனவும் கடுமையாகச் சாடியுள்ளார்.

இன்று பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற அவசர ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய அரசியல் யாப்புக்கான ஆரம்ப வரைபுகள் இன்னமும் சிலநாட்களில் உத்தியோகபூர்வமாக வெளிவரவிருக்கிறது.

அந்த அரசியல் யாப்பானது தமிழர்களின் ஆறு தசாப்த கால பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மட்டத்திலிருக்கிறது. தலைவர்களாலும் அவ்வாறான நம்பிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் எவ்வாறான அரசியல் யாப்பின் ஊடாகத் தமிழர்கள் இந்தத் தீவிலே பாதுகாப்பாக, கெளரவமாக, சமத்துவமாக வாழக்கூடிய நிலைமை உருவாகும் என்பதனைத் தமிழ்ச் சமூகத்தினர் சரியாகப் புரிந்து கொண்டு உகந்ததொரு அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு எல்லோரும் விரைந்து செயலாற்ற வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏழு வருடங்களாகத் தமிழ்ச் சமூகத்தினரின் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்த் தலைமைகளால் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இணைந்த வடகிழக்கில் ஒரு சமஸ்டித் தீர்வாகப் பெறுவதற்குத் தாங்கள் முயற்சித்து வருவதாகவே சொல்லப்பட்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டிலும், 2015 ஆம் ஆண்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடகிழக்கில் ஒரு சமஸ்டித் தீர்வைத் தாங்கள் பெற்றுத் தருவோம் எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

இவ்வாறானதொரு நிலைமையில் இன்னும் சில நாட்களில் புதிய அரசியல் யாப்பு ஒரு வடிவம் பெற்று வெளியே வரவிருக்கிறது.

அதன் பின்னர் அந்த யாப்புப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரப்படவிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து அந்த யாப்புப் பொதுசன வாக்கெடுப்பிற்கு விடப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

கடந்த-30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தமிழர்கள் இறைமையைப் பகிர்ந்து அதிகாரத்தைக் கோர முடியும்.

ஆனால், இறைமையைப் பகிர்ந்தளிக்கின்றதொரு அதிகாரத்தைத் தாங்கள் கோரவில்லையெனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். அதன் ஊடாக அவர் தமிழர்கள் ஒரு சமஸ்டி ஆட்சியைக் கோரவில்லையென அந்த அறிவிப்பின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமஸ்டி அதிகாரம் எங்களுக்கு கிடைக்க வேண்டுமெனில் எங்களுடைய இறைமையைக் கூட்ட வேண்டும். அல்லது இறைமையைப் பகிர வேண்டும்.

இறைமையைப் பகிர்தல் என்பது அதிகாரப்பகிர்வுடனான ஒரு சமஸ்டி. இறைமையைக் கூட்டுதல் என்பது தேசம் அங்கீகரிக்கப்பட்ட வகையிலானதொரு சமஸ்டி.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் தேசம் அங்கீகரிக்கப்பட்டதொரு சமஸ்டியையே நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால், கூட்டமைப்பினர் நாங்கள் கூறுவது நடைமுறைச் சாத்தியமற்றது, கற்பனை எனக் கூறிக் கொண்டு மறுபுறம் நடைமுறைச் சாத்தியமான, அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அதாவது இறைமையைப் பகிர்வதன் மூலமான சமஸ்டியைப் பெற்றுத் தரப் போகிறோம் எனவே கூறி வருகிறார்கள்.

குறிப்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் பின்னர் நாங்கள் இறைமைக்கான அங்கீகாரம் தொடர்பில் பேச முற்பட்ட போது மக்கள் மத்தியில் அது எடுபடத் தொடங்கியது.

இது கூட்டமைப்புத் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய விமர்சனத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களைக் குழப்ப வேண்டுமென்பதற்காக கூட்டமைப்பினரும் இறைமை பற்றிப் பேசினார்கள்.

அப்போது அவர்கள் மிகவும் இலாபகமாக மக்களால் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியாது என்று கருதியதன் அடிப்படையில் இறைமையைப் பகிந்து கொள்வதன் மூலம் தாங்கள் ஒரு சமஸ்டித் தீர்வைப் பெற முடியும் எனப் பேசத் தொடங்கினார்கள்.

சம்பந்தன் ஐயா கூட அவ்வாறு பலதடவைகள் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பேசி வந்தவர்கள் இன்று இறைமையைப் பகிருமாறு நாங்கள் கோரவில்லை என ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் தெளிவாக ஒற்றையாட்சிக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். அரசாங்கத்தின் ஒரு முக்கியமான அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒற்றையாட்சி மூலமான தீர்வினைக் காண்பதற்கு இணங்கியிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒற்றையாட்சி மூலமான தீர்வுக்குக் கூட்டமைப்பினர் சம்மதிப்பது என்பது தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைத்துத் தமிழ்மக்களை எதிர்காலத்தில் நாதியற்றவர்களாக உருவாக்கி இனத்தையே இல்லாமல் செய்யும் ஒரு செயற்பாடாகும்.

ஏற்கனவே சுமந்திரன் வடகிழக்கு இணைப்பு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வடகிழக்கு இணைப்புச் சாத்தியமில்லை, ஒற்றையாட்சி முறைக்குக் கூட்டமைப்பினர் இறங்கியிருக்கிறார்கள் என்றால் தீர்வொன்ற ஒன்றும் இல்லை.

68 ஆண்டு காலமாக இலங்கையில் நடைமுறையிலிருந்து வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குத் தமிழர்கள் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஈ.பி.டி.பியினரும், அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுகின்ற தரப்பினரும் சேர்ந்து தமிழ்மக்களால் இதுவரை காலமும் ஏற்றுக் கொள்ளப்படாதிருந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிற்குத் தமிழ்மக்களுடைய ஆணையைப் பெற்றுக் கொடுத்துத் தமிழ்மக்கள் இந்த யாப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, தமிழ்மக்களுக்குத் தீர்வு கொடுக்கப்பட்டாயிற்று என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்கள்.இது பாரியதொரு ஆபத்தான விடயம் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

Comments