இலங்கையில் யுத்த மீறல்கள் இடம்பெற்றே வருகின்றது - அஸீஸ்

Report Print Kumar in சமூகம்
83Shares

யுத்தம் நிறைவடைந்த போதிலும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டே இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு அலுவலகம் இன்று(9) நடாத்திய வைபவத்தின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'நமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்த போதிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

மனித உரிமை என்பது மனித உரிமை ஆணைக்குழுவுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இந்த நாட்டிலிருக்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் சொந்தமான ஒரு விடயமே மனித உரிமையாகும்.

மனித உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த தினத்தை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.

யுத்தம் இல்லை என்பதால் மனித உரிமை மீறலும் இல்லாமல் போய் விட்டது என்று நினைக்கக்கூடும். ஆனால், யுத்தம் முடிந்தாலும் மனித உரிமை மீறல் முடியவில்லை.

ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோ ஒரு வகையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை சந்தித்தே வருகின்றான். நாட்டில் கலாசார ரீதியாக மற்றும் இனங்களுக்கிடையில் விரிவுபடுத்தப்பட்ட செயல்கள், இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள், நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் நிகழ்வுகள் என்பன நமது நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

நல்லதொரு மனித உரிமை மிக்க கலாச்சாரமுள்ள சமூகத்தை உருவாக்குவது முக்கியமாகும். இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படுத்தாத சிறந்த சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். உரிமைகளுக்காக எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

கடந்தகால கசப்பான நிகழ்வுகள் எமக்கு அனுபவமாக இருக்கின்றது. மனித உரிமைகள் இந்த நாட்டில் மதிக்கப்படாது, மிதிக்கப்பட்ட போது அதற்காக பாடுபட்டு உரிமைகளின் அர்த்தங்களை அச்சமான சூழ்நிலைகளிலும் பாதுகாத்த மனித நேயமுள்ளவர்கள் பலர் திரைமறைவில் இருக்கின்றனர்.

எனவே, அடுத்தவர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அதில் நிம்மதி கண்டவர்கள் இன்று சமுகத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது கவலைக்குரியதாகும். ஏனையோரின் உரிமைக்களுக்காய் இன்றே எழுவோம் இன்று எமது நாடு நல்லிணக்கப் பொறிமுறைகளை நோக்கிப் பயணிக்கிறது.

இத்தருணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தப்புச் செய்தவர்களை சட்டத்தின் முன் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக முயற்சி செய்கின்றபோது, அதனை சகித்துக்கொள்ள முடியாமல் குடும்ப ரீதியில் பாதுகாப்புக் கொடுத்துவருகின்றனர்.

சிறுவர் துஷ்பிரயோகங்களினால் எத்தனையோ சிறார்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியில் திரியும் போது அப்பாவிச் சிறுவர்கள் காப்பகங்களில் பாதுகாப்புக்காக பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், அச்சிறுவர்கள் குடும்பங்களுடன் வாழுகின்ற உரிமையினை அனுபவிக்கத் தவறுகின்றனர். இது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது என மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments