யாழில். 'வன்முறையற்ற மகிழ்வான குடும்பம்' விழிப்புணர்வு நிகழ்வு

Report Print Thamilin Tholan in சமூகம்
108Shares

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் விழிப்புணர்வுச் செயற்பாட்டின் இறுதிநாள் நிகழ்வு இன்று (09) யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது

"வன்முறையற்ற மகிழ்வான குடும்பம்" எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழகச் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நடராஜா குருபரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

இதன் போது பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாட்டில் யாழ்.சமூகச் செயற்பாட்டு மையத்தால் கிராம மட்டத்தில் செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளின் விளக்கக் காணொளி திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த செயற்திட்டத்தின் மூலம் கிராம மட்டத்தில் நன்மை பெற்ற பயனாளிகள் சார்பில் புங்குடுதீவைச் சேர்ந்த யுவதியொருவரும், சங்கானையைச் சேர்ந்த ஆணொருவரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

குடும்பத்தில் சமத்துவம், சமாதானம் பேணிச் சமூதாயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பதுடன், பால்நிலைச் சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு சமூகத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றன.

யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் என்.சுகிர்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் , இலங்கை மற்றும் மாலைதீவு ஐக்கிய அமெரிக்கத்தூதரகத்தின் உதவிச் செய்தி அதிகாரி றசேல், யாழ்.மகளிர் அபிவிருத்திநிலைய இயக்குனர் சரோஜா சிவச்சந்திரன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகவும், பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் உதயனி நவரட்ணம் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

.

Comments