அன்று தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று எமது தமிழ் மொழி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது இதனை கருத்தில் கொண்டு எமது இளம் தலைமுறை செயற்படவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.
பாண்டிருப்பு அகரம் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் செ.துஸ்யந்தனின் படைப்பில் உருவான பல்சுவை இதழான “விருந்து“ எனும் நூல் வெளியீடானது நேற்று (06) மாலை கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது எமது இளைஞர் யுவதிகளிடையே வெளிநாட்டு கலை, கலாச்சாரங்கள், மொழி ஊடுருவி காணப்படுகின்றது குறிப்பாக எமது அயல் நாடான இந்தியாவில் இருந்து வெளியாகும் நாடகங்களை எடுத்துக்கொண்டால் அந்நிய மொழியான ஆங்கிலம் தான் கூடுதலாக பேசப்படுகின்றது.
எமது மொழியான தமிழ் மொழியை கட்டிக்காத்து வளர்க்க வேண்டியது எமது ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்புமாகும்.
அதனடிப்படையிலேதான் தமிழர்களது கலை, கலாச்சாரம், வரலாறு என்பவற்றை எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கு இவ்வாறான இதழ்கள், சஞ்சிகைகள் இளைஞர்கள் மத்தியில் மறுமலர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
எவ்வாறான சஞ்சிகைகள் வெளிவந்தாலும் தமிழர்களுடைய தொன்மைகளையும், வரலாறுகளையும் தமிழ் உணர்வோடு பரப்புகின்ற செயற்பாடுகளுடன் வெளிவரவேண்டும்.
அதற்கு ஏற்றாற்போல் இன்று வெளியிடுகின்ற இந்த சஞ்சிகையானது தமிழ் மக்களை பொறுத்த வரையில் மொழியின் சிறப்பு, அதன் செயற்பாடுகள் பற்றிய கட்டுரை, கவிதை மூலமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. தமிழின் சிறப்பினை மேலும் எடுத்துக்காட்டி நிற்கின்றது.
இன்றும் பாடசாலைகளில் உள்ள பாடப்புத்தகங்களில் குறிப்பாக பாடத்திட்டங்களில் தமிழர்கள் தொடர்பான பல வாலாற்று சரித்திரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் செல்கின்றது. ஆகவேதான் நாங்கள் எதிர்கால சந்ததியினருக்கு எமது வரலாறுகள், தொன்மைகள், சரித்திரங்களை தெரியப்படுத்த வேண்டுமாக இருந்தால் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்று ரீதியான நூல்களை வெளியிடுவது காலத்தின் கட்டாயமாகும். எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலக செயலாளர் கே.லவநாதன், கவிஞர்கள், படைப்பாளிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.