தமிழ் மக்களையும் தமிழையும் பாதிக்கின்ற செயற்பாடுகளிலும் அதனை அழிக்க வேண்டும் என்ற செயற்பாடுகளிலும் வேற்று இனத்தவர்கள் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்முனையில் தமிழ் பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் நேற்று(06) மாலை கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பாரதியார் கூறிய படி தமிழர்கள் எட்டுத் திசைகளுக்கும் சென்று தமிழையும் தமிழர்களது கலை, கலாச்சார, பண்பாடு என்பனவற்றையும் எடுத்துச் சென்று மற்றவர்களுக்குச் சொல்லி நிலை நிறுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது.
தமிழ் மொழியானது மிகவும் செம்மையானதும் முதுமையானதுமான மொழியாக இருப்பதனால் அதனை பாதுகாக்க வேண்டியது எமது அனைவரினதும் ஒட்டுமொத்த தலையாய கடமையாகவும் இருக்கின்றது.
விசேடமாக எமது ஈழத்து மண்ணிலே வடகிழக்கு மாகாணங்களிலே வாழ்கின்ற எமது தமிழர்கள் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டும் மாறாக மேலைத்தேய கலை கலாச்சாரங்களுக்குள் தங்களை ஈடுபடுத்தாமல் எமது கலாச்சாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழப் பழகிக் கொள்வதுடன் அனைவரும் விளிப்பாக இருந்து செயற்பட வேண்டும்.
இன்று தமிழர்களது வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கல்முனையில் கூட எமது வரலாறுகள் திரிவு படுத்தப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் நாங்கள் அவதானமாக செயற்பட வேண்டும். கல்முனையைப் பொறுத்த வரையில் அன்று தமிழ் மன்னன்தான் இதனை ஆண்டிருக்கின்றான். ஆனால் அதனை வேறு விதமாக திரிவுபடுத்திச் சொல்லப்படுகின்ற நிலைதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதனைத் தடுத்து நிறுத்தி எமது பூர்வீக வரலாறுகளையும் உண்மையான வரலாறுகளையும் எமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் இவ்வாறான சஞ்சிகைகளில் எமது வரலாறுகள் தொடர்பான ஆவணங்கள் அமையப் பெற்றிருப்பதோடு கல்வி சம்மந்தமான விடயங்களும் அமையப் பெற வேண்டும். அவ்வாறு அமையப் பெறுகின்ற போதுதான் எமது மக்களும் மாணவர்களும் அதனை கற்று அதன் மூலம் உண்மைகளை கற்றுக் கொள்வார்கள்.
மிகவும் பழமையானதும் முதன்மையானதுமான மொழி தமிழ் மொழியே ஆகும். இந்த மொழி அருகிப் போகக் கூடாது என்ற காரணத்தினால்தான் ரஷியாவின் மாளிகையில் கூட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டிருக்கின்றது.
அவ்வாறு மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியினைப் பேணிப் பாதுகாத்து எமது இடுத்த சந்ததியினருக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.