தோட்டப் பகுதி மக்கள் வீதியைச் சீர்திருத்தம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
18Shares

டயகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டயகம – சந்திரிகாமம் தோட்டத்திற்குச் செல்லும் மூன்று கிலோ மீற்றர் பிரதான வீதியைச் சீர்திருத்தம் செய்யக் கோரி இன்று(07) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இப்பகுதி மக்கள் முன்னெடுத்தனர்.

இந்த வீதி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மக்கள் பாவனைக்குதவாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

சந்திரிகாமம் தோட்டத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பிரதான வீதியினூடாகவே டயகம நகரிற்கு தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் போக்கு வரத்து நடத்த வேண்டும்.

இவ்வீதி தொடர்பில் காலங்காலமாக இப்பகுதி மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதிலும் இவ்வீதியை சீர்திருத்தம் செய்வதில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதில் 150 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் சந்திரிகாமம் தோட்டத்தில் கூட்டுறவு சங்க கடையின் முன்னால் பிரதான வீதியில் இவ்வார்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், “நல்லாட்சி அரசாங்கம் இரண்டு வருட காலப் பகுதியை எட்டியுள்ளது. தேர்தல் காலத்தில் இந்த ஆட்சியின் ஊடாக எமது வீதி சீர்திருத்தம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் எமது வாக்குகளை அளித்தோம். ஆனால் இரண்டு வருடங்களாகியும் இந்த ஆட்சியில் கூட எமது பாதை சீர்திருத்தம் செய்யப்படவில்லை.

அன்றாட போக்குவரத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் அவதியுறும் நிலையை கவனத்திற் கொண்டு இவ்வீதியை காலம் தாழ்த்தாது செப்பனிட்டு தரும்படி அரசாங்கத்தையும் நுவரெலியா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்” எனத் தெரிவித்தனர்.

Comments