தோட்டப் பகுதிகளை அபிவிருத்தி செய்ய புதிய திட்டம் - ஆறுமுகன் தொண்டமான்

Report Print Thirumal Thirumal in சமூகம்
45Shares

பெருந்தோட்டப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த வகையில் முதல் முறையாக டயகம பிரதேசத்தை இலக்காகக் கொண்டு அங்குள்ள தோட்டங்களை ஒரு வருடத்தில் முழுமையான அபிவிருத்தியை செய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளது என காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று(07) இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மலையக பெருந் தோட்டப் பகுதிகளுக்கு பகுதி பகுதியாக பொருட்களை கையளிப்பதும் தோட்டப் பகுதிகளின் அடிப்படைத் தேவைகளை பகுதி பகுதியாக முன்னெடுப்பதும் சிறந்ததாக அமையவில்லை.

ஆகையினால் தற்பொழுது திட்டம் ஒன்றை காங்கிரஸ் வகுத்துள்ளது. இதனடிப்படையில் தோட்டப் பகுதிகளின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கென வழி வகை ஒன்றைக் கையாளவுள்ளோம்.

அதற்காக டயகம பிரதேசத்தை இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக தேர்வு செய்துள்ளோம். அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளை

தீர்ப்பதற்கு அப்பகுதி தொடர்பில் அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று இப்பகுதிகளுக்கான முழுமையான அபிவிருத்தி திட்டத்தை ஒரு வருட திட்டமாக செயல்படுத்தி பூர்த்தியாக்க உள்ளோம்.

இது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளது.

புதிதாக வகுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் ஊடாக ஒரு பிரதேசத்தை முழுமையாக பெற்று அதன் அபிவிருத்திப் பணிகளை ஒரு வருட காலப் பகுதிக்குள் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகள் காணப்படுகின்றது. இவ்விதி முறைகளின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகள் செய்யும் பொழுது வெற்றி கிடைக்கும் என்பது உறுதி.

பொதுவான திட்டம் ஒன்றை ஒரு தோட்டப் பகுதியில் எடுக்கும் பொழுது அங்கு வீதிகள் மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளை செய்து கொடுக்கும் பட்சத்தில் பாதி வேலைத் திட்டங்கள் முடிவடையும்.

இன்றைய இளைஞர்கள் தேக ஆரோக்கியத்தடன் செயலாற்ற அன்று முதல் இளைஞர்களை விளையாட்டுதுறையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஊக்குவித்து வருகின்றது.

அந்த வகையில் தொடர்ந்தும் விளையாட்டுகளில் முன்னேற அரசாங்கத்தால் கொடுக்கும் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு கழகங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதுடன் பதிவு செய்த கழகங்களின் ஊடாக கூடுதலான திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது பெரும்பான்மையினருக்கு சமமாக வாழக் கூடிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது தோட்ட பகுதிகளிலே பதிவு செய்யப்பட்ட 49 விளையாட்டுக் கழகங்களுக்கு மூன்று அரை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments