சிறையில் இருந்த சுங்க அதிகாரிக்கு பதவி உயர்வு: ஜனாதிபதி செயலகம் விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்
157Shares

கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியால் ஒருவரை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான காயத்தை உண்டாக்கினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பிரதி சுங்க பணிப்பாளர் ஒருவர், விளக்கமறியலில் இருக்கும் போது சுங்க பணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி செயலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டதில் நடந்த துறைசார முறைகேடு தொடர்பான கண்காணிப்பு மற்றும் பரிந்துரைகளை முன்வைக்குமாறு அரச சேவை ஆணைக்குழு நிதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சுங்க பணிப்பாளரை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ள போதிலும் பணிப்பாளர் நாயகம் அதனை தாமதித்து வருவதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சந்தேக நபரான சுங்க பணிப்பாளர் கடந்த வருடம் 02 ஆம் மாதம் 10 ஆம் திகித பத்தரமுல்லை ஆசிரி உயன பிரசேதத்தில் தனது துப்பாக்கியை பயன்படுத்தி உதித்த சஞ்ஜீவ எல்விட்டிகல என்பவரை சுட்டு மரண காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கடுவலை நீதவான் நீதிமன்றம் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அடையாள அணி வகுப்பில் தாக்குதலுக்கு இலக்கானவர் சுங்க பணிப்பாளரை அடையாளம் காட்டியுள்ளார்.

அவர் விளக்கமறியலில் இருக்கும் போது சுங்க பணிப்பாளர் நாயகம் அவரை நலன் அறிய சிறைச்சாலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபரான சுங்க பணிப்பாளர் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி சுங்க பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற நிலையிலேயே பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மறுநாள் அவரை பதவி ஏற்றுக்கொண்டதாகவும் சுதந்திர ஊழியர் சங்கம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளது.

Comments