மட்டக்களப்பில் சோளம் வியாபாரிக்கு நடந்த சோகம்

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு மாநகருக்குள் வீதி வியாபார செயற்பாடுகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வாகனங்களில் வந்து கல்லடிப்பாலம், திருமலை வீதி, பார் வீதி என பல இடங்களில் காலத்திற்குத் தகுந்தாற்போல் பண்டங்களை தெரிவு செய்து சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு எதிராக சுத்தம் பற்றி பேசும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரட்டியடிக்கவுமில்லை என கூறப்படுகின்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பகுதிகளிலிருக்கும் ஒருவர், தனது குடும்பத்தின் வயிற்று பிழைப்பிற்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும். தன் முழு சக்தியையும் விரயம் செய்து உற்பத்தி செய்த மரக்கறி, தானிய வகைகளை சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கிறார். பல மைல் தூரங்கள் வரை சைக்கிள் மிதித்து நகருக்குள் வந்து வீதியின் ஒரு ஓரமாக நின்று வியாபாரம் செய்யும் போது மட்டும் தான் மட்டக்களப்பு மாநகரத்தின் தூய்மை கெட்டு விடப்போகிறதா? என்ற கேள்வி இன்று நடைபெற்ற சம்பவத்தின் மூலம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சோளம் விற்பவர் கண்டிப்பாக பல கடைக்கு சொந்தமான வியாபாரியாக இருக்க மாட்டார். வயிற்றுப் பிழைப்புத்தான் கண்டிப்பாக விற்று முடிய குப்பைகளை போட வேண்டாம் என்று எச்சரித்தல் போதுமானது, இவரின் சோளனை பறிமுதல் செய்வது நல்லதொரு விடயம் அல்ல என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வேளை உணவில்லாமல் கஷ்டப்படும் எத்தனையோ குடும்பங்களை கண்முன் பார்த்தும் நடவடிக்கை எனும் பெயரில் உணவுப் பொருட்களை குப்பைகளுடன் ஏற்றும் மனோபாவம் எங்கிருந்து வந்தது?

பல துணிச்சல் மிக்க, அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அதிகாரிகளைக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில் ஒரு சில அதிகாரிகளின் செயற்பாடுகள் அருவெறுக்கத்தக்கதாகவுள்ளது என பொது மக்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், தயவுசெய்து அசுத்தம் வெளியிலிருந்து தான் உள்ளே வருகின்றது எனும் மனோநிலையிலிருந்து கொஞ்சம் உள்ளேயும் பாருங்கள். நாம் அவர்களை விட அழுக்காக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Comments