மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம்

Report Print Sethu Sethu in சமூகம்
86Shares

மட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து நேற்று(08) பிற்பகல் 3.30 மணியளவில் இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊடகங்கள் ஊடாக விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்புக்கு அமைய குறித்த அமைப்புக்கான இடைக்கால நிர்வாகம் ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்திற்கான யாப்பு உள்ளிட்ட செயற்றிட்ட வரைவு ஒன்றை சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த இடைக்கால நிர்வாகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை இயங்கும் என்றும் அதன் பின்னர் மேலும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொண்டு நிரந்தரமான புதிய நிர்வாகம் ஒன்று அமைக்கப்படுமென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய 21 பேர் அடங்கிய தற்காலிக மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் தற்காலிக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு ஒன்றியத்தின் செயற்பாட்டிற்கான யாப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களாக, வைத்தியர் எம்.முருகமூர்த்தி (மட்டக்களப்பு வைத்திய நிபுணர்), பேராசிரியர் ஜெ.கனடி (கிழக்குப் பல்கலைகழக விரிவுரையாளர்), வைத்தியர் கே.இ.கருணாகரன் (மட்டக்களப்பு வைத்திய நிபுணர் மற்றும் விரிவுரையாளர்), கே.குருநாதன் (காணி நிபுணத்துவ ஆலோசகர் மற்றும் முன்னாள் காணி ஆணையாளர்), எஸ்.விஜயகுமார் (சட்டத்தரணி), வி.மகேந்திரநாதன், எஸ்.நிலாந்தன் (ஊடகவியலாளர்), வி.கிருஸ்ணகுமார் (ஊடவியலாளர்), எ.இருதயநாதன், பா.பரசுராமன், எஸ்.சிவயோகநாதன், எஸ்.கணேசலிங்கம், பி.முரளிதரன், கு.ஜெகனீதன், எஸ்.ராஜன், கே.விநாயகமூர்த்தி, எஸ்.பரமானந்தன் (மாற்றுத் திறனாளிகள் அமைப்பு), ஆர்.ருத்திராதேவி, பா.ராகினி, பி.சிறானி, எஸ்.சோமாவதி மற்றும் பா.லங்கேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

இந்த அமைப்பின் தற்காலிக நிர்வாக உறுப்பினர்களாக, தலைவர் - எஸ்.விஜயகுமார் (சட்டத்தரணி), செயலாளர் - எஸ்.ராஜன் மற்றும் பொருளாளர் - எஸ்.நிலாந்தன் (ஊடகவியலாளர்) ஆகியோர் உள்ளனர்.

இந்த அமைப்பின் எதிர்கால செயற்பாடுகளாக, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தல்.

மாவட்டத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் காணி அபகரிப்பை தடுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல்.

இலங்கையின் இன்றை அரசியல் சூழ்நிலை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல்.

தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு உரிமைகளை வலியுறுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல்.

தமிழர்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல்.

தமிழ் மக்களின் கல்வி மற்றும் பொருளாதரம் போன்ற விடயங்களை அபிவிருத்தி செய்தல்.

முன்னாள் போராளிகள், காணாமல் போனோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுவர்கள் போன்றோரின் வாழ்வாதார உரிமைகளுக்கான வேலைத் திட்டங்களை உருவாக்குதல்.

இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.ராஜன் கூறுகையில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்களை, பொது மக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஒருமித்த மக்கள் குரலாக செயற்படுவது என குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.






Comments